ஆன்லைன் மோசடி குறித்து விழிப்புணர்வு பிரசாரம்
திருவாரூரில் பஸ்-ரெயில் நிலையங்களில் ஆன்லைன் மோசடி குறித்து விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.;
திருவாரூர்;
திருவாரூர் மாவட்டம் சைபர் கிரைம் போலீசார், திருவாரூர் இருப்பு பாதை போலீசார் சார்பில் திருவாரூர் பழைய பஸ் நிலையம் மற்றும் ரெயில் நிலையத்தில் சைபர்கிரைம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. சைபர்கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா தலைமையில் போலீசார் விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை வினியோகம் செய்தனர். அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா பஸ் மற்றும் ரெயில் நிலையத்தில் உள்ள பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது அவர் பேசுகையில், உங்களது ஏ.டி.எம்., ஆதார், பான் கார்டு குறித்த தகவல்களை யாருக்கும் கொடுக்க வேண்டாம். ஏ.டி.எம். கார்டுகளில் உங்களது பாஸ்வேர்டை எழுதக்கூடாது. முகம் தெரியாத எந்த ஒரு நபரையும் நண்பர்களாக்கி கொள்ள வேண்டாம். அவ்வாறு நண்பராக இருந்தாலும் அவர்களிடம் தங்களைப்பற்றிய முக்கிய தகவல்களை தெரிவிக்க வேண்டாம். ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்கும் போது கவனத்துடன் வாங்கவும். ஆன்லைன் முறை அல்லது வேறு ஏதேனும் முறையில் தங்களிடம் பணம் மோசடி செய்யப்பட்டு இருந்தால் cybercrime.gov.in என்ற இணையதள முகவரியில் புகார் அளிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
---