திருகல் நோயால் சின்ன வெங்காயம் விளைச்சல் பாதிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் திருகல் நோயால் சின்ன வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-12-31 19:02 GMT

சாகுபடியில் முதலிடம்

இல்லத்தரசிகளின் சமையலில் முக்கிய உணவு பொருளாக சின்ன வெங்காயம் விளங்குகிறது. அத்தகைய சின்ன வெங்காயம் தமிழகத்திலேயே பெரம்பலூர் மாவட்டத்தில் தான் அதிகமாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மேலும் சின்ன வெங்காய சாகுபடியில் தமிழகத்தில் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டும் மாவட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் சின்ன வெங்காயம் சாகுபடி செய்துள்ளனர். அதுவும் ஆலத்தூர் தாலுகாவில் அதிகளவு சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது.

திருகல் நோயால் விளைச்சல் பாதிப்பு

ஏற்கனவே கடந்த ஆண்டுகளில் சின்ன வெங்காயம் சாகுபடியில் பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து நஷ்டத்துக்கு ஆளாகி வந்த விவசாயிகளுக்கு இந்த ஆண்டும் வேரழுகல் நோய் எனப்படும் திருகல் நோய் தாக்குதலினால் சின்ன வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டது. காலம் கடந்து தற்போது பெய்த பருவமழையினால் வயலில் தண்ணீர் தேங்கியதால் சின்ன வெங்காய பயிர்கள் திருகல் நோயால் பாதிக்கப்பட்டு வருகிறது.

தற்போது சின்ன வெங்காயத்துக்கு நல்ல விலை இருக்கும்போது, பயிர்களை திருகல் நோய் தாக்கி விளைச்சல் பாதிக்கப்பட்டு வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

கிலோ ரூ.60-க்கு கொள்முதல்

ஆலத்தூர் தாலுகா, கூத்தனூரை சேர்ந்த வளர்மதி:- தற்போது சின்ன வெங்காயம் சாகுபடி செய்து 50 நாட்களுக்கு மேல் ஆகிறது. 70 நாள் பயிரான சின்ன வெங்காயத்தை இன்னும் 20 நாட்களில் அறுவடை செய்ய இருந்தோம். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையினாலும், மார்கழி மாத கடும் பனி பொழிவாலும் சின்ன வெங்காய பயிர் திருகல் நோய் தாக்குதலுக்கு உள்ளாகி விளைச்சல் பாதிக்கப்பட்டு வருகிறது. தற்போது முதல் தர சின்ன வெங்காயத்தை விவசாயிகளிடம் இருந்து கிலோ ரூ.60 வரை கொடுத்து வியாபாரிகள் கொள்முதல் செய்ய முன்வருகிறார்கள். நல்ல விலை இருந்தும் தற்போது திருகல் நோயால் விளைச்சல் பாதிக்கப்பட்டு வருவது வேதனையாக உள்ளது. இப்படி இருந்தால் இன்னும் 10 நாட்களிலேயே சாகுபடி செய்த சின்ன வெங்காயத்தை உழவு செய்து அழிக்கும் நிலை விவசாயிகளுக்கு ஏற்படும்.

நிவாரணம் பெற்றுத்தர வேண்டும்

விவசாயி சத்தியராஜ்:- ஏற்கனவே விதை வெங்காயம் விலையேற்றம், ஆட்கள் பற்றாக்குறை, கூலி உயர்வு, மருந்து, உரங்களின் விலை உயர்வு போன்ற பல்வேறு இடையூறுகளை விவசாயிகள் சந்தித்து சின்ன வெங்காயத்தை சாகுபடி செய்து வருகின்றனர். எனவே திருகல் நோயால் பாதிக்கப்பட்ட சின்ன வெங்காய பயிர்களை மாவட்ட தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கணக்கெடுத்து, விவசாயிகளுக்கு அரசின் நிவாரண தொகை அல்லது காப்பீடு தொகையை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மத்திய அரசு சின்ன வெங்காயத்துக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய மாநில அரசு வலியுறுத்த வேண்டும்.

விலை அதிகரிக்க வாய்ப்பு

நாட்டார்மங்கலத்தை சேர்ந்த வியாபாரி ரமேஷ்:- பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து தற்போது சின்ன வெங்காயத்தை கிலோ ரூ.40 முதல் ரூ.60 வரை கொள்முதல் செய்கின்றனர். தற்போது சின்ன வெங்காயம் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கிலோ ரூ.95 வரை விற்கப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகை வர இருப்பதால் அதன் விலை இன்னும் அதிகரிக்கலாம். இந்த நிலையில் திருகல் நோய் தாக்கி வருவதால் சின்ன வெங்காயம் உற்பத்தி குறையும் என்பதாலும் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

தொழிற்சாலை தொடங்க வேண்டும்

செட்டிகுளத்தை சேர்ந்த பார்த்திபன்:- சின்ன வெங்காய பயிருக்கு காப்பீடு செய்யும் விவசாயிகளில், சிலருக்கு பல்வேறு தொழில் நுட்ப பிரச்சினைகளால் காப்பீடு தொகை கிடைக்காமல் போகிறது. இதனை சரி செய்ய சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் செட்டிகுளத்தில் உள்ள சின்ன வெங்காய சேமிப்பு கிடங்கை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். செட்டிகுளம் சின்ன வெங்காய வணிக வளாகத்தில் அனைத்து அரசு வேலை நாட்களில் ஏலம் நடத்த வேண்டும். சின்ன வெங்காயம் அதிகம் சாகுபடியாகும் பெரம்பலூர் மாவட்டத்தில் சின்ன வெங்காயத்தில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க தொழிற்சாலை தொடங்க வேண்டும். செட்டிகுளத்தில் சின்ன வெங்காயத்துக்கு ஆராய்ச்சி நிலையம் தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

சுழற்சி முறையில் பயிர் சாகுபடி

இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், மழையின் போது இந்நோய் சின்ன வெங்காய பயிரை தாக்கும். விவசாயிகள் சின்ன வெங்காயத்தை தொடர்ந்து பயிர் செய்யாமல், சுழற்சி முறையில் ஒரு முறையாவது வேறு பயிரை சாகுபடி செய்தால், இந்நோய் கட்டுக்குள் வரும், என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்