ஈரோடு மாநகராட்சியில் நடந்து வரும் சாலை மேம்பாட்டு பணிகளைவிரைவாக முடிக்க வேண்டும்; அமைச்சர் சு.முத்துசாமி உத்தரவு
ஈரோடு மாநகராட்சியில் நடந்து வரும் சாலை மேம்பாட்டு பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று அமைச்சர் சு.முத்துசாமி உத்தரவிட்டார்.;
ஈரோடு மாநகராட்சியில் நடந்து வரும் சாலை மேம்பாட்டு பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று அமைச்சர் சு.முத்துசாமி உத்தரவிட்டார்.
ஆய்வுக்கூட்டம்
ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் நடந்து வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு தமிழக வீட்டுவசதித்துறை, மதுவிலக்கு -ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமை தாங்கினார். கலெக்டர் ராஜகோபால் சுன்கரா முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் ஈரோடு மாநகராட்சியில் 60 வார்டுகளிலும் தற்போது நடந்து வரும் வளர்ச்சித்திட்ட பணிகள், சாலை மேம்பாட்டு பணிகள் குறித்து அமைச்சர் ஆய்வு செய்தார். 15-வது நிதிக்குழு திட்டம், தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் வளர்ச்சி திட்டம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம், நமக்கு நாமே திட்டம், தூய்மை இந்தியா இயக்கம், அம்ரூத் 2.ஓ., நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டம் உள்ளிட்ட திட்டங்ளில் நடந்து வரும் பணிகள் தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், மின்சார வாரிய அதிகாரிகள் என்று அனைத்து துறை அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார்.
அமைச்சர் உத்தரவு
கூட்டத்தில் பேசிய அமைச்சர் சு.முத்துசாமி, மாநகராட்சி பகுதியில் நடைபெறும் சாலை மேம்பாட்டு பணிகள் உள்பட அனைத்து பணிகளையும் விரைவாக முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதில் மாவட்ட வருவாய் அதிகாரி ச.சந்தோஷினி சந்திரா, மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன், துணை கலெக்டர் (பயிற்சி) காயத்திரி, மாநகராட்சி துணை ஆணையாளர் சுதா, மாநகராட்சி பொறியாளர் விஜயகுமார், செயற்பொறியாளர் சண்முகவடிவு உள்பட பலர் கலந்து கொண்டனர்.