பள்ளி தூய்மை பணியாளர்களுக்கு ஓராண்டு ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்
பள்ளி தூய்மை பணியாளர்களுக்கு ஓராண்டு ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயற்குழு கூட்டம் திருவாரூரில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் ஜூலியஸ், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, அய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தின் நோக்கங்கள் குறித்து மாவட்ட செயலாளர் ஈவேரா பேசினார். திருவாரூர் மாவட்டத்தில் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு கடந்த ஓராண்டாக ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது. அவர்களுக்கு ஓராண்டுக்கான ஊதியம் முழுவதையும் உடனடியாக வழங்க வேண்டும். பள்ளிகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் (ஜூலை) 30-ந் தேதி டெல்லியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திருவாரூர் மாவட்டத்தில் இருந்து ஆசிரியர்கள் திரளாக பங்கேற்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியன், தமிழ்வாணன், செல்வமணி, வட்டார செயலாளர்கள் வேதமூர்த்தி, ஹரிகிருஷ்ணன், பாலகிருஷ்ணன், தமிழரசன், சந்திரமோகன், பிரகாஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.