கட்டி முடிக்கப்படாத சிறு பாலத்தில் விழுந்து ஒருவர் படுகாயம்
செங்கம் அருகே கட்டி முடிக்கப்படாத சிறு பாலத்தில் விழுந்து ஒருவர் படுகாயம் அடைந்தார்.;
செங்கம்
செங்கம் -திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் மண்மலை அருகே கட்டி முடிக்கப்படாத சிறு பாலத்தால் அவ்வப்போது விபத்துகள் ஏற்படுவதாக கடந்த 26-ந் தேதி தினத்தந்தியில் செய்தி வெளியானது.
இதுகுறித்து அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்காததால் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் விபத்தில் சிக்கினார்.
நேற்று இரவு இறையூர் பகுதியை சேர்ந்த ராஜன் என்பவர் மோட்டார்சைக்கிளில் செங்கத்தில் இருந்து இறையூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது மண்மலை அருகே கட்டி முடிக்கப்படாத சிறுபாலத்தில் விழுந்தார்.
இந்த விபத்தில் ராஜனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
செங்கம்- திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் மண்மலை மற்றும் கரியமங்கலம், கொட்டகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சிறு பாலம் அமைக்கும் பணி மற்றும் சாலை அமைக்கும் பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.
சிறு பாலம் அமைக்கும் பணி நடைபெறும் இடத்தில் எச்சரிக்கை பலகை மற்றும் ஒளி பிரதிபலிப்பான்கள் வைக்க வேண்டும் எனவும், விபத்துக்களை தவிர்த்திட விரைந்து சாலை அமைக்கும் பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கும், சம்பந்தப்பட்ட துறையினருக்கும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.