தமிழகத்திற்கு மேலும் ஒரு வந்தே பாரத் ரெயில்...!
சென்னை எழும்பூர் - நெல்லை இடையே தமிழகத்திற்கான 3-வது வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.;
சென்னை,
தமிழகத்தின் தென்மாவட்டங்களை இணைக்கும் வகையில் சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு வந்தே பாரத் ரெயில் இயக்க ரெயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது. சென்னை - நெல்லை வந்தே பாரத் ரெயில் திருச்சி, மதுரை வழியே திருநெல்வேலிக்கு செல்லும்.
சென்னை - திருநெல்வேலி இடையே தற்போது 10 மணி நேர இடைவெளியில் விரைவு ரெயில்கள் இயக்கப்படும் நிலையில் 'வந்தே பாரத்' ரெயில் 8 மணி நேரத்தில் சென்றடையும்.
திருநெல்வேலியிலிருந்து காலை 6 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் சென்னைக்கு பிற்பகல் 2 மணியளவில் வந்தடையும். பின் சென்னையிலிருந்து பிற்பகல் 3 மணியளவில் புறப்பட்டு இரவு 11 மணியளவில் திருநெல்வேலி சென்றடையும். இந்த ரெயில் திருச்சி, திண்டுக்கல், மதுரை ஆகிய 3 ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
சென்னை - நெல்லை வந்தே பாரத் ரெயில் சேவையை ஆகஸ்ட் 6 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடக்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்மாநில மக்களுக்கு வந்தே பாரத் ரெயில் ஒரு வரப்பிரசாதமாக அமையப்போகிறது எனலாம்.
தமிழகத்தின் முதல் வந்தே பாரத் ரெயில் சென்னை சென்ட்ரல் - கோவை இடையே கடந்த ஏப்.8-ஆம் தேதி தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.