அரசியல் கட்சி பிரமுகர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

அரசியல் கட்சி பிரமுகர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது;

Update:2023-03-19 00:15 IST

நீடாமங்கலம் அருகே அரசியல் கட்சி பிரமுகர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். கொலைக்கு பயன்படுத்திய அரிவாளுடன் கொலையாளிகள் 'செல்பி' எடுத்து கொண்டது விசாரணையில் தெரிய வந்தது.

அரசியல் கட்சி பிரமுகர் வெட்டிக்கொலை

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள பூவனூர் பகுதியை சேர்ந்தவர் பூவனூர் ராஜ்குமார். இவர் வளரும் தமிழகம் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளராக இருந்தார்.

கடந்த வாரம் திருவாரூர் மாவட்ட கோர்ட்டில் வழக்கு ஒன்றில் ஆஜராகிவிட்டு கமலாபுரம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது 8 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.

துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்

இந்த வழக்கில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் பகுதியில் பதுங்கி இருந்த திருவாரூர் அழகிரி காலனியை சேர்ந்த பிரவீன் (வயது 22) என்பவரை போலீசார் கைது செய்ய சென்றபோது சப்-இ்ன்ஸ்பெக்டரை வாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்றதால் அவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.

மேலும் ஒருவர் கைது

இந்த கொலை வழக்கில் தொடர்புடைய ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியை சேர்ந்த ராஜா(50) என்பவரை போலீசார் புதுக்கோட்டை பகுதியில் வைத்து நேற்று கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ராஜா உள்ளிட்ட குற்றவாளிகள் கொலை நடப்பதற்கு முதல் நாள் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திருமண மண்டபத்தில் உள்ள ஒரு அறையில் அமர்ந்து ராஜ்குமாரை கொலை செய்ய திட்டம் தீட்டி உள்ளனர்.

கொலை செய்த அரிவாளுடன் 'செல்பி'

மேலும் மன்னார்குடி, நீடாமங்கலம், திருவாரூர் உள்ளிட்ட 3 இடங்களில் மூன்று குழுவினர் ராஜ்குமாரை கொலை செய்வதற்காக தயார் நிலையில் இருந்ததும், ராஜ்குமார் கமலாபுரம் நோக்கி செல்வதை தெரிந்து கொண்டு மன்னார்குடியில் இருந்த குழுவினர் காரில் வேகமாக வந்து அவர் கார் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி கொலை செய்ததும் தெரிய வந்தது.

மேலும் கைதானவர்கள் கொலை செய்ய பயன்படுத்திய அரிவாளுடன் 'செல்பி' எடுத்துக் கொண்டதும் விசாரணையில் தெரிய வந்தது.

Tags:    

மேலும் செய்திகள்