உயர்கல்வியை தொடர 7 மாணவ, மாணவிகளுக்கு ரூ.1 லட்சம் நிதிஉதவி-குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் வழங்கினார்

Update: 2023-05-08 18:45 GMT

நாமக்கல்:

நாமக்கல்லில் நேற்று நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் உயர்கல்வியை தொடர வசதியாக 7 மாணவ, மாணவிகளுக்கு ரூ.1 லட்சம் நிதிஉதவியை கலெக்டர் ஸ்ரேயாசிங் வழங்கினார்.

குறைதீர்க்கும் கூட்டம்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமையில் நடந்தது. இதில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு மொத்தம் 348 மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் வழங்கினர். இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், அவற்றை பரிசீலினை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டார்.

மாணவ, மாணவிகளுக்கு நிதிஉதவி

அதனைத்தொடர்ந்து, உயர்கல்வி தொடராத மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டுதல் உதவி மையத்தின் மூலம் உயர்கல்வி தொடர்வதற்காக நிதி உதவியாக தன் விருப்புரிமை நிதியிலிருந்து 3 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.20 ஆயிரம், 4 மாணவிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் என மொத்தம் 7 மாணவ, மாணவிகளுக்கு ரூ.1 லட்சத்திற்காக காசோலையினை கலெக்டர் வழங்கினார். மேலும், சமூக பொறுப்பு நிதியிலிருந்து தனியார் நிறுவனத்தின் சார்பில், தலா ரூ.23,500 மதிப்பில் 50 பள்ளிகளுக்கு நாப்கின் எரியூட்டி எந்திரங்களை அந்த நிறுவனத்தின் பொது மேலாளர் மோகன்பிரசாத் முன்னிலையில் கலெக்டர் வழங்கினார்.

பின்னர் கலெக்டர் அலுவலக தரை தளத்தில் மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று, துறை அலுவலரிடம் வழங்கி அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுலவர் மணிமேகலை, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) பிரபாகரன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்