மோட்டார்சைக்கிள்கள் மோதலில் ஒருவர் பலி
மோட்டார்சைக்கிள்கள் மோதலில் ஒருவர் பலியானார்.;
ஆரணி
மோட்டார்சைக்கிள்கள் மோதலில் ஒருவர் பலியானார்.
ஆரணியை அடுத்த வடுகசாத்து கிராமத்தைச் சேர்ந்த சுந்தரம் என்பவரின் மகன் குமரன் (வயது 40). ஆட்டோ டிரைவர். சர்க்கரை நோயால் ஒரு கால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது செயற்கை கால் வைத்து இருந்து வருகிறார்.
சம்பவத்தன்று நண்பர் ராஜேந்திரனுடன் மோட்டார் சைக்கிளில் குமரன் பின்னால் அமர்ந்து சென்றார். அரையாளம் கிராமத்திற்கு சென்ற அவர்கள் அங்கிருந்து திரும்பிக்கொண்டிருந்தனர். சீனிவாசபுரம் கூட்ரோடு அருகே வந்தபோது ஆரணியிலிருந்து அரையாளம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் இவர்கள் வந்த மோட்டார்சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த குமரன் சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். ராஜேந்திரன் காயமின்றி தப்பினார்.
இது குறித்து ஆரணி தாலுகா போலீசில் குமரனின் தாய் மகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த குமரனுக்கு திருமணம் ஆகி மனைவியை பிரிந்து விவாகரத்து பெற்று தாயுடன் வசித்து வந்தார். அவருக்கு குழந்தைகள் ஏதும் இல்லை.