ஓணம் பண்டிகைக்கான விற்பனை குறைந்தது:நெகமம் காட்டன் சேலைகள் தேக்கம்

ஓணம் பண்டிகைக்கான விற்பனை குறைந்ததால் உற்பத்தி செய்யப்பட்ட நெகமம் காட்டன் சேலைகள் விற்பனை குறைந்து தேக்கம் அடைந்துள்ளது.;

Update: 2023-09-03 19:15 GMT

நெகமம்

ஓணம் பண்டிகைக்கான விற்பனை குறைந்ததால் உற்பத்தி செய்யப்பட்ட நெகமம் காட்டன் சேலைகள் விற்பனை குறைந்து தேக்கம் அடைந்துள்ளது.

விற்பனை குறைவு

நெகமம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் ஏராளமான கைத்தறி நெசவாளர்கள் உள்ளனர். அவர்கள் தங்கள் வீடுகளில் காட்டன் சேலைகளை உற்பத்தி செய்து வருகிறார்கள். இங்கிருந்து வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் காட்டன் சேலைகள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும் ஓணம் பண்டிகையையொட்டி காட்டன் சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு, கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு காட்டன் சேலைகள் விற்பனை பெருமளவில் குறைந்துவிட்டது. இதன் காரணமாக கைத்தறி நெசவாளர்கள் கவலையடைந்து உள்ளனர்.

வாழ்வாதாரம் பாதிப்பு

இதுகுறித்து கைத்தளி நெசவாளர்கள் கூறியதாவது:-

ஓணம் பண்டிகையையொட்டி நெகமம் காட்டன் சேலைகள் பிரத்யேகமாக தயாரித்து கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படும். குறிப்பாக திருவனந்தபுரம், கொச்சி, திருச்சூர் மற்றும் பாலக்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிகளவில் அனுப்பி வைக்கப்படும்.

ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்தை விட குறைந்த அளவே வர்த்தகம் நடைபெற்று உள்ளது. ஏற்கனவே நூல் விலை ஏற்றம், கைத்தறி ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்வது உள்ளிட்ட பிரச்சினைகளால் கைத்தறி நெசவுத்தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. தற்போது விற்பனையும் குறைந்து வருவதால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் காட்டன் சேலைகளும் தேக்கம் அடைந்து உள்ளன.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்