ஓணம் பண்டிகை எதிரொலி: சென்னை-கேரளா விமான கட்டணம் பல மடங்கு உயர்வு

ஓணம் பண்டிகையையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் கூட்டம் அதிகரித்து உள்ளதால் சென்னை-கேரளா இடையே விமான கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.;

Update: 2023-08-25 20:54 GMT

சென்னை,

ஓணம் பண்டிகை வருகிற 29-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதனால் சென்னை மற்றும் அதை சுற்றி உள்ள மாவட்டங்களில் வசிக்கும் கேரள மாநிலத்தவர்கள் தங்கள் சொந்த ஊரில் குடும்பத்துடன் ஓணம் பண்டிகையை கொண்டாட கேரளாவுக்கு புறப்பட்டு செல்கிறார்கள். இதனால் ரெயில்களில் முன்பதிவு முடிந்துவிட்டது. ஆம்னி பஸ்களில் கட்டணம் அதிகமாக உள்ளதால் பெருமளவிலான கேரள மாநில பொதுமக்கள், விமானங்களில் சொந்த ஊருக்கு செல்லத் தொடங்கி உள்ளனர்.

இதனால் சென்னை விமான நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய நகரங்களுக்கு செல்லும் விமானங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

கட்டணம் உயர்வு

இதையடுத்து விமான கட்டணங்களும் பல மடங்கு ராக்கெட் வேகத்தில் அதிகரித்து உள்ளன. சென்னை- திருவனந்தபுரம் இடையே வழக்கமான விமான கட்டணம் ரூ.3,225. ஆனால் தற்போதைய கட்டணம் ரூ.19,089.

சென்னை-கொச்சி வழக்கமான கட்டணம் ரூ.2,962. தற்போதைய கட்டணம் ரூ.10,243. சென்னை- கோழிக்கோடு வழக்கமான கட்டணம் ரூ.3,148. தற்போதைய கட்டணம் ரூ.21,228. சென்னை-கண்ணூர் வழக்கமான கட்டணம் ரூ.3,351. தற்போதைய கட்டணம் ரூ.13,814.

இவ்வாறு பல மடங்கு கட்டணம் அதிகரித்து உள்ளது.

ஆனாலும் பயணிகள் கட்டண உயர்வை பற்றி கவலைப்படாமல் ஓணம் பண்டிகையை சொந்த ஊரில் குடும்பத்தினருடன் கொண்டாட வேண்டும் என்ற ஆர்வத்தில் விமானங்களில் பயணம் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்