திருச்செந்தூரில்சூரசம்ஹாரத்தை முன்னிட்டு தற்காலிக பஸ்நிலையங்கள், வாகன நிறுத்தும் இடங்கள் ஏற்பாடு: போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன்

திருச்செந்தூரில்சூரசம்ஹாரத்தை முன்னிட்டு தற்காலிக பஸ்நிலையங்கள், வாகன நிறுத்தும் இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.

Update: 2022-10-28 18:45 GMT

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு தற்காலி பஸ் நிலையங்கள், வாகன நிறுத்தும் இடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இது குறித்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கந்த சஷ்டி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்த விழாவில் சுமார் 10 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மாவட்ட நிர்வாகம், போலீஸ் துறை, அறநிலையத்துறை ஆகியவை இணைந்து பொதுமக்களுக்கு எந்தவித சிரமமும் இன்றி சூரசம்ஹாரம் மற்றும் சாமி தரிசனம் செய்வதற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

வாகன நிறுத்தம்

தூத்துக்குடி மார்க்கமாக திருச்செந்தூர் வரும் பக்தர்கள் வாகனங்களை நிறுத்துவதற்காக ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பின்புறம் அமைந்துள்ள ஜெ.ஜெ நகரில் சுமார் 5 ஆயிரம் வாகனங்கள் நிறுத்துவதற்கு பார்க்கிங் அமைக்கப்பட்டுள்ளது. நெல்லை மார்க்கமாக திருச்செந்தூர் வரும் பக்தர்கள் வாகனங்களை நிறுத்துவதற்காக அன்பு நகரில் உள்ள வியாபாரிகள் சங்க திடலில் சுமார் 3 ஆயிரம் வாகனங்கள் நிறுத்துவதற்கு பார்க்கிங் அமைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மற்றும் பரமன்குறிச்சி மார்க்கமாக திருச்செந்தூர் வரும் பக்தர்கள் வாகனங்களை நிறுத்துவதற்காக முருகாமடம் அருகில் எப்.சி.ஐ குடோன் திடலில் சுமார் 1000 வாகனங்கள் நிறுத்துவதற்கு பார்க்கிங் அமைக்கப்பட்டுள்ளது.

இன்று (சனிக்கிழமை) காலை 8 மணி முதல் இந்த வாகன நிறுத்தங்களில் வாகனங்கள் நிறுத்துவதற்கு பிரதான சாலைகளில் சோதனைசாவடிகள் அமைத்து வாகனங்கள் அனுப்பப்படும். கோவில் வளாகத்தில் அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் இருப்பதால் அனுமதிக்கப்பட்ட வாகனங்களை தவிர மற்ற அனைத்து வாகனங்களும் மேற்கூறிய வாகன நிறுத்தங்களில் போலீஸ் ஒத்துழைப்புடன் நிறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அரசு பஸ்கள் நிறுத்துவதற்காக 3 தற்காலிகள் பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தூத்துக்குடி சாலையில் ஆதித்தனார் கல்லூரி எதிரே உள்ள பொருட்காட்சி திடல், நெல்லை சாலையில் ராயல் என்பீல்டு ஷோரூம் எதிரே உள்ள சுடலை மாடசாமி கோவில் திடல், கன்னியாகுமரி மற்றும் பரமன்குறிச்சி சாலையில் தெப்பக்குளம் ரவுண்டானா ஆகிய இடங்களில் தற்காலிக பஸ் நிலையம் செயல்படும்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

சூரஷம்ஹார விழா காண வரும் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி கொள்ளாமல் இருக்க கடற்கரை பகுதிகளில் தடுப்பு கம்புகள் கட்டப்பட்டு உள்ளன. கடற்கரை ஓரங்களில் நீராட வரும் பக்தர்களின் பாதுகாப்புக்கென தீயணைப்பு மற்றும் மீட்புக் குழு, கடலோர பாதுகாப்பு குழுமம் மற்றும் பயிற்சி பெற்ற நீச்சல் வீரர்கள் அமர்த்தப்பட்டும், கடலில் ஆழமாக சென்று நீராடுவதை தவிர்க்க மிதவை பந்துகள் மூலமாக எல்லை கயிறுகள் கட்டப்பட்டுள்ளது. மேலும் கடலோர போலீஸ் குழுமத்தின் மூலம் படகுகள் மூலம் ரோந்து போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். குற்ற சம்பவங்களை தவிர்ப்பதற்காக கோவில் வளாகத்தில் 115 கண்காணிப்பு கேமிராக்கள் மற்றும் கோவில் சுற்று வட்டாரங்கள், நகர முக்கிய பகுதிகளில் பொறுத்தப்பட்டுள்ள 85 கண்காணிப்பு கேமராக்கள் மூலமாகவும், டிரோன் கேமராக்கள் மற்றும் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கோபுரங்கள் மூலமாகவும் தீவிர கண்காணிப்புபணி மேற்கொள்ளப்படுகிறது. மேலும் பக்தர்கள் போலீசாருக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்