சரசுவதி, ஆயுத பூஜையையொட்டி பூக்கள் விலை அதிகரிப்பு
சரசுவதி, ஆயதபூஜையையொட்டி தேனி மாவட்டத்தில் பூக்கள் விலை அதிகரித்துள்ளது.
உப்புக்கோட்டை, பாலார்பட்டி, கூழையனூர், பூதிப்புரம், வாழையாத்துப்பட்டி, சின்னமனூர், கோட்டூர், சீலையம்பட்டி, ஆண்டிப்பட்டி, மரிக்குண்டு, சுப்புலாபுரம் ஆகிய பகுதிகளில் பூக்கள் சாகுடி செய்யப்பட்டுள்ளது. இங்கு மல்லிகை, முல்லை, ஜாதிப்பூ, கனகாம்பரம், செண்டுப்பூ, செவ்வந்தி, ரோஜா போன்ற பூக்கள் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் பூக்கள் தேனி, சீலையம்பட்டி, ஆண்டிப்பட்டி பகுதிகளில் உள்ள பூ மார்கெட்டுகளுக்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் நவராத்திரி விழா, சரசுவதி மற்றும் ஆயுத பூஜையையொட்டி பூக்களின் விலை அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மார்க்கெட்டில் கடந்த வாரம் ரூ.300-க்கு விற்ற மல்லிகைப்பூ தற்போது ரூ.800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் கனகாம்பரம் ரூ.250, ஜாதிப்பூ ரூ.400, சம்பங்கி ரூ.220, மரிக்கொழுந்து ரூ.100, செண்டுப்பூ ரூ.250 முதல் ரூ.300 வரை விற்பனையானது.