திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பங்குனி திருவிழாவையொட்டி ஆழித்தேரோட்டம் தொடங்கியது..!

உலக புகழ் பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது.;

Update: 2023-04-01 01:02 GMT

திருவாரூர்,

திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமையிடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலின் ஆழித்தேர், ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமையை பெற்றது.

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர விழாவையொட்டி ஆழித்தேரோட்டம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். 96 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சி அளிக்கும் ஆழித்தேர், திருவாரூர் நகர வீதிகளில் அசைந்தாடி வரும் அழகு காண்போரின் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் இருக்கும்.

ஆழித்தேரை சீராக இயக்க திருச்சி பாய்லர் ஆலை நிறுவனம் மூலம் இரும்பு அச்சு மற்றும் 4 இரும்பு சக்கரங்களிலும் 'ஹைட்ராலிக் பிரேக்' பொருத்தப்பட்டுள்ளது.

ஆழித்தேரின் முன்பகுதியில் 4 குதிரைகள், யாழி, பிரம்மா உள்ளிட்ட பொம்மைகள் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்ட தேரின் மொத்த எடை 300 டன்னாக இருக்கும். திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம் இன்று காலை 7.30 மணிக்கு தொடங்கியது. பக்தர்கள் பரவசமுடன் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். 

ஆழித்தேரோட்டத்தின்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி சங்கிலி பறிப்பு, திருட்டு போன்றவற்றை தடுக்க சாதாரண உடையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனா். மேலும் அசம்பாவிதங்களை தவிா்க்க 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்