சித்திரை திருவிழாவையொட்டி குதிரை வாகனத்தில் வீரப்ப அய்யனார் நகர்வலம்

சித்திரை திருவிழாவையொட்டி வீரப்ப அய்யனார் குதிரை வாகனத்தில் எழுந்தருளி நகர்வலம் வந்தார்.

Update: 2023-04-13 18:45 GMT

சித்திரை திருவிழா

தேனி அல்லிநகரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் வீரப்ப அய்யனார் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவில் நேற்று அல்லிநகரம் ஊருக்குள் இருக்கும் வீரப்ப அய்யனார் கோவிலில் இருந்து குதிரை வாகனத்தில் வீரப்ப அய்யனார் எழுந்தருளி நகர்வலம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து ஆட்டம் பாட்டத்துடன் வந்தனர்.

ஊர்வலம்

கோவிலில் தொடங்கிய ஊர்வலம் அல்லிநகரம், தேனியில் முக்கிய வீதிகள் வழியாக பங்களாமேட்டில் உள்ள சோலைமலை அய்யனார் கோவிலுக்கு சென்றது. பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு அல்லிநகரம் கோவிலுக்கு இரவு வந்தடைந்தது. செல்லும் இடம் எங்கும் பக்தர்கள் திரளாக திரண்டு நின்று சாமி தரிசனம் செய்தனர்.

திருவிழாவில் இன்று (வெள்ளிக்கிழமை) ஊரில் உள்ள கோவிலில் இருந்து காவடிகளுடன் சாமி ஊர்வலம் புறப்பட்டு மலைக்கோவிலுக்கு செல்கிறது. இந்த திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்