ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி முத்துமாரியம்மன் கோவிலில் மஞ்சள் அரைத்த பெண்கள்

ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையான இன்று காரைக்குடி முத்துமாரியம்மன் கோவிலில் மஞ்சள் அபிஷேகம் நடக்கிறது. இதற்காக நேற்று பெண்கள் அம்மியில் வைத்து பச்ச மஞ்சளை அரைத்தனர்.;

Update: 2023-07-20 18:45 GMT

காரைக்குடி

ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையான இன்று காரைக்குடி முத்துமாரியம்மன் கோவிலில் மஞ்சள் அபிஷேகம் நடக்கிறது. இதற்காக நேற்று பெண்கள் அம்மியில் வைத்து பச்ச மஞ்சளை அரைத்தனர்.

மஞ்சள் அரைப்பு

சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் அருகே மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார், பத்திரகாளியம்மன் கோவில், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில், கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோவில், காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவில் உள்ளிட்ட ஏராளமான கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் ஆடிமாதம் வரும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அபிஷேகம், அலங்கார பூஜை, திருவிளக்கு பூஜை, கோமாதா பூஜை, பக்தர்கள் பால்குடம் எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.

இன்று ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை என்பதால் காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவிலில் மஞ்சள் அபிஷேகம் நடைபெறுகிறது. இதற்காக நேற்று மாலை கோவில் வளாகத்தில் 51 அம்மிகளில் சுமார் 300 கிலோ வரை பச்ச மஞ்சளை பெண்கள் அரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பெண்கள் அம்மியில் மஞ்சள் வைத்து அரைத்தனர். இவ்வாறு அரைக்கப்பட்ட இந்த மஞ்சளை கொண்டு இன்று மதியம் உச்சி கால பூஜையின் போது அம்பாளுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.

விழாவில் சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவர் தேவிமாங்குடி, தொழிலதிபர் சுப்புலெட்சுமி சரவணன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

சங்காபிஷேகம்

விழாவையொட்டி வருகிற 22-ந்தேதி வளையல் அலங்காரமும், 25-ந்தேதி பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சியும் 28-ந்தேதி மாலை திருவிளக்கு பூஜை வழிபாடு நிகழ்ச்சியும், ஆகஸ்ட் 4-ந்தேதி 1008 சங்காபிஷேகம் நிகழ்ச்சியும், கடைசி வெள்ளிக்கிழமையான 11-ந் தேதி கோமாதா பூஜையும் நடக்கிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஞானசேகரன் தலைமையில் செயல் அலுவலர் மகேந்திரபூபதி மற்றும் கோவில் பணியாளர்கள், சேவைக்குழுவினர் செய்து வருகின்றனர்.

சிறப்பு பஸ்கள்

இதேபோல் இன்று திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார், பத்திரகாளியம்மன் கோவிலில் ஆடி முதல் வெள்ளியான இன்று காலை சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. தொடர்ந்து மதியம் உச்சிகால பூஜைகள் நடைபெறுகிறது. இதில் சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, விருதுநகர், மதுரை உள்ளிட்ட ஏராளமான மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் கலந்துகொள்கின்றனர். மேலும் மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மடப்புரத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதேபோல் தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில், கொல்லங்குடி வெட்டுடையார்கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்