ஆடி அமாவாசை திருவிழாவையொட்டிசதுரகிரி கோவிலுக்கு செல்லும் பக்தர்களிடம் வனத்துறையினர் சோதனை

ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி வருசநாடு அருகே சதுரகிரி கோவிலுக்கு செல்லும் பக்தர்களிடம் வனத்துறையினர் சோதனை நடத்தினர்.

Update: 2023-08-15 18:45 GMT

விருதுநகர் வனப்பகுதியில் சதுரகிரி மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு வருசநாடு அருகே உப்புத்துறை கிராமம் வழியாக செல்ல பாதை உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடி அமாவாசை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டு ஆடி அமாவாசை திருவிழா இன்று (புதன்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி தேனியில் இருந்து உப்புத்துறை வரை 50-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் நேற்று முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உப்புத்துறை கிராமத்திற்கு வந்து மலைப்பாதை வழியாக கோவிலுக்கு நடந்து செல்ல தொடங்கினர். இதனால் வருசநாடு, மேகமலை, கண்டமனூர் வனத்துறையினர் யானைக்கஜம் பகுதியில் சோதனை சாவடி அமைத்து கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் இருந்து பிளாஸ்டிக், தீப்பெட்டி, பீடி, சிகரெட் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர். உணவு மற்றும் குடிநீர் பாட்டில்களுக்கு மட்டுமே வனத்துறையினர் அனுமதி அளித்தனர். மேலும் வனவிலங்குகள் நடமாட்டம் காரணமாக காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இதேபோல், மயிலாடும்பாறை போலீசாரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்