ஆடி அமாவாசையையொட்டிபவானி கூடுதுறையில் குவிந்த பக்தர்கள்முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு
ஆடி அமாவாசையையொட்டி பவானி கூடுதுறையில் குவிந்த பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனா்;
ஆடி அமாவாசையையொட்டி பவானி கூடுதுறையில் குவிந்த பக்தர்கள், முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
பவானி கூடுதுறை
ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் காவிரி, பவானி, அமுதநதி என 3 நதிகள் சங்கமிக்கிறது. இங்குள்ள சங்கமேஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமியை தரிசனம் செய்துவிட்டு் செல்வார்கள். இதனால் பக்தர்கள் கூட்டம் எப்போதும் கோவிலில் அலைமோதும்.
மேலும் மார்கழி அமாவாசை, தை அமாவாசை, ஆடி மாதம் 1-ந் தேதி, ஆடிப்பெருக்கு, புரட்டாசி அமாவாசை தினங்கள் சிறப்பு பெற்றவையாகும். அப்போது பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தங்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து காவிரி ஆற்றில் புனித நீராடி மகிழ்வார்கள். புதுமண தம்பதிகள் தாலி கயிறுகளை மாற்றி கட்டி கொள்வார்கள்.
திதி, தர்ப்பணம் கொடுத்தனர்
இந்த ஆண்டு ஆடி மாதம் 1-ந் தேதி நேற்று பிறந்தது. மேலும் ஆடி அமாவாசையாகும். ஆனால் வழக்கத்தை விட பவானி கூடுதுறையில் இந்த ஆண்டு கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. ஈரோடு, நாமக்கல், சேலம், கோவை, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்திருந்தனர்.
இவர்கள் பரிகார மண்டபத்தில் தங்கள் முன்னோர்களுக்கு எள், தர்ப்பை புல், பிண்டம் வைத்து திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர். மேலும் இறந்த தங்களது குழந்தைகளுக்கு கருகுமணி, காய்கறி, கீரைகள், புத்தாடைகள் ஆகியவற்றை படையலிட்டு பரிகார பூஜைகளும் செய்தனர்.
தடுப்புகள் அமைப்பு
பெண்கள் முளைப்பாரியை ஆற்றில் விட்டு தங்கள் தாலி சரடுகளை மாற்றி கட்டி கொண்டனர். தனித்தனியாக தடுப்புகள் அமைக்கப்பட்டு ஆண்களும், பெண்களும் ஆற்றில் புனிதநீராடினார்கள். பின்னர் சங்கமேஸ்வரர் கோவிலுக்கு சென்று நீண்ட வரிசையில் நின்று சாமியை வழிபட்டு சென்றனர்.
பக்தர்கள் கூட்டத்தையொட்டி பவானி போலீஸ் துணை சூப்பிரண்டு அமிர்தவர்ஷினி தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதேபோல் பவானி தீயணைப்பு வீரர்களும், மருத்துவ சிகிச்சை அளிக்க நடமாடும் மருத்துவ குழுவினரும் ஆம்புலன்சுடன் தயாராக இருந்தது குறிப்பிடத்தக்கது.