அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் -மாவட்டத்தில் 10 மாணவ, மாணவிகளுக்கு எம்.பி.பி.எஸ். வாய்ப்பு
அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கான எம்.பி.பி.எஸ். சேர்க்கைக்கு இந்த கல்வியாண்டில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த பள்ளிக்கல்வித்துறை பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட 10 மாணவ, மாணவிகள் தகுதி பெற்றுள்ளனர்.
அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கான எம்.பி.பி.எஸ். சேர்க்கைக்கு இந்த கல்வியாண்டில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த பள்ளிக்கல்வித்துறை பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட 10 மாணவ, மாணவிகள் தகுதி பெற்றுள்ளனர்.
எம்.பி.பி.எஸ். சேர்க்கை
மதுரை மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்காக நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த வகுப்புகளில் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டு பயிற்சி பெறுகின்றனர். இதற்காக கடந்த 2021-ம் ஆண்டு முதல் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு மாதிரி தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. இதற்கிடையே, சமீபத்தில் நடந்து முடிந்த நீட் தேர்வில் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட 657 மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுதினர்.
இதில் அரசு மாதிரிப்பள்ளிகளில் படிக்கும் 63 பேர் உள்பட 500 மாணவ, மாணவிகள் அரசுப்பள்ளிகளை சேர்ந்தவர்கள். இவர்களில் 141 அரசுப்பள்ளி மாணவ, மாணவிகள் உள்பட 192 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டு கலந்தாய்வில் இவர்களுக்கு எம்.பி.பி.எஸ் சேர்க்கை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் 10 இடம்
மகபூப்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஹர்சினி 614 மதிப்பெண்ணும், மாநகராட்சி அவ்வை மேல்நிலைப்பள்ளி மாணவி சத்யஜோதி 561 மதிப்பெண்ணும், விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி மாணவி புவனேசுவரி 468 மதிப்பெண்ணும், அதேபள்ளியை சேர்ந்த மாணவர் ஆதித்யன் 464 மதிப்பெண்ணும், பாண்டியராஜபுரம் சர்க்கரை ஆலை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் யுகபிரவீன் 402 மதிப்பெண்ணும், மாநகராட்சி நாகம்மை மேல்நிலைப்பள்ளி மாணவி சாரதா 394 மதிப்பெண்ணும், அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் சூரியக்குமார் 340 மதிப்பெண்ணும், மாநகராட்சி நாகம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி வர்ஷினி மீனாட்சி 334 மதிப்பெண்ணும், பாரபத்தி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி போதும்பொண்ணு 333 மதிப்பெண்ணும், மாநகராட்சி நாகம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி அபிநயா 324 மதிப்பெண்ணும் பெற்று மாவட்ட அளவில் முதல் 10 இடங்களை பிடித்துள்ளனர்.
நீட் பயிற்சி வகுப்புகள்
நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் கடந்த 2020-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆன்லைனில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்த வகுப்புகளில் பயிற்சி பெற்ற அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 226 மாணவ, மாணவிகள் முதல் முறையாக நீட் தேர்வில் கலந்து கொண்டனர். தேர்ச்சிக்கு 113 மதிப்பெண் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இவர்களில் அரசுப்பள்ளி மாணவர்கள் 21 பேர் உள்பட 68 பேர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றனர். அதில் 17 பேருக்கு மருத்துவ சேர்க்கையில் இடம் கிடைத்தது.
2021-ம் ஆண்டு, 523 மாணவ, மாணவிகள் பயிற்சி வகுப்பில் பங்கேற்றனர். தகுதித்தேர்வுக்கான தேர்ச்சி மதிப்பெண் 108 என நிர்ணயிக்கப்பட்டது. இவர்களில் அரசுப்பள்ளி மாணவர்கள் 100 பேர் உள்பட 182 பேர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். அதில் 25 பேர் அரசு மருத்துவக்கல்லூரிகளில் மருத்துவ சேர்க்கை பெற்றனர்.
2022-ம் ஆண்டு 758 மாணவ, மாணவிகள் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். தேர்ச்சி மதிப்பெண் 96 என நிர்ணயிக்கப்பட்டது. இவர்களில் 170 அரசுப்பள்ளி மாணவர்கள் உள்பட 300 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றிருந்தனர். அதில் 9 பேர் அரசு மருத்துவக்கல்லூரிகளில் மருத்துவ சேர்க்கை பெற்றனர்.