விநாயகர் சதுர்த்தி விழாவில் திடீர் மோதலால் பரபரப்பு

செங்கோட்டை அருகே விநாயகர் சதுர்த்தி விழாவில் இரு தரப்பினர் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. அதை தடுக்க முயன்ற போலீஸ்காரர் காயமடைந்தார்.;

Update: 2023-09-18 18:45 GMT

செங்கோட்டை:

செங்கோட்ைட அருகே விநாயகர் சதுர்த்தி விழாவில் இரு தரப்பினர் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. அதை தடுக்க முயன்ற போலீஸ்காரர் காயமடைந்தார்.

இரு தரப்பினர் மோதல்

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. அதன்படி செங்கோட்டை அருகே லாலாகுடியிருப்பு கிராமத்தில் நேற்று விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது தொடர்பாக, அப்பகுதியைச் சேர்ந்த இரு தரப்பினர் இடையே திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. அவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போலீஸ்காரர் காயம்

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் கணேஷ் முருகன் (வயது 37) இரு தரப்பினரையும் தடுத்து சமாதானப்படுத்த முயன்றார். அப்போது சிலர் தாக்கியதில் கணேஷ்முருகனின் முகத்தில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

இதுகுறித்து புளியரை போலீசார் கொலைமுயற்சி வழக்குப்பதிவு செய்து, ஒருவரை கைது செய்தனர். மேலும் சிலரை வலைவீசி தேடி வருகின்றனர்.

பொதுமக்கள் போராட்டம்

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, செங்கோட்டை அருகே கீழப்புதூர் கிராமத்தில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து அப்பகுதி மக்கள் விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்து செல்ல முயன்றனர்.

அப்போது அங்கு வந்த செங்கோட்டை தாசில்தார் முருகசெல்வி, போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணா மற்றும் அதிகாரிகள், அனுமதியின்றி விநாயகர் சிலையை வைக்க கூடாது என்று அறிவுறுத்தினர். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, விநாயகர் சிலையின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் கூறுகையில், அனுமதியின்றி வைத்த சிலையை ஆற்றில் கரைத்து விடுங்கள், அடுத்த ஆண்டு அனுமதியுடன் சிலை வையுங்கள் என்று தெரிவித்தனர். இதையடுத்து விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்து சென்று ஆற்றில் கரைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்