பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணி
திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணி நடந்தது.;
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி சமூக நல செவிலியர் துறை மற்றும் மாணவ செவிலியர் சங்கம் சார்பில் 2-ம் ஆண்டு, 4-ம் ஆண்டு மாணவிகளால் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணி நேற்று நடத்தப்பட்டது. இப்பேரணி திருச்செந்தூர் ஆதித்தனார் கல்வி நிறுவன அலுவலகத்திலிருந்து தொடங்கியது. இப்பேரணியை திருச்செந்தூர் நகராட்சி தலைவி சிவஆனந்தி தலைமையில், ஆணையாளர் வேலவன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணி பகத்சிங் பஸ்நிலையம் வழியாக காமராஜர் சாலை, வடக்கு ரதவீதி, கீழரதவீதி, தெற்கு ரதவீதி, மேலரதவீதி வழியாக சென்று மீண்டும் ஆதித்தனார் கல்வி நிறுவன வளாகத்தில் நிறைவு பெற்றது. இப்பேரணியில், தவிர்ப்போம் தவிர்ப்போம் பிளாஸ்டிக்கை தவிர்ப்போம், பிளாஸ்டிக்கை ஒழிப்போம், நம் பூமியை காப்போம், பிளாஸ்டிக்கை தவிர்ப்போம், மனிதவளம் காப்போம், உருவாக்குவோம் உருவாக்குவோம்
பிளாஸ்டிக் இல்லா இந்தியாவை உருவாக்குவோம், பிளாஸ்டிக் என்பது விஷமாகும் அதை ஒழிப்பது நம் கடமையாகும், பிளாஸ்டிக்கை எரிக்காதே கேன்சரை பெருக்காதே, பிளாஸ்டிக் புகை உயிருக்கு பகை, ஒருமுறை பிளாஸ்டிக் பயன்பாடு தருமே நமக்கு பெரும்பாடு, பிளாஸ்டிக்கை விடு துணிப்பை எடு, வேண்டாம் வேண்டாம் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் வேண்டாம் என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவிகள் கையில் ஏந்தியவாறும், கோஷங்கள் எழுப்பியவாறும் சென்றனர். பேரணியில், திருச்செந்தூர் ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட்ராமராஜ், செயலாளர் நாராயணராஜன், கல்லூரி முதல்வர் என்.கலைக்குரு செல்வி, கல்லூரி பேராசிரியைகள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.
இப்பேரணியை சமூக நல செவிலியர் துறை பிரிவு இணை பேராசிரியை சங்கீதா ஒருங்கிணைத்து நடத்தினார். இதை தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் முதல்வர் கலைக்குருசெல்வி மரக்கன்றுகள் நாட்டினார்.