22-ந் தேதி விண்ணில் பாய்கிறது அக்னிபான் ராக்கெட்

ஸ்ரீஹரிகோட்டாவில் தனியார் ஏவுதளத்தில் இருந்து 'அக்னிபான்' ராக்கெட் வருகிற 22-ந் தேதி விண்ணில் ஏவப்படுகிறது.

Update: 2024-03-18 16:22 GMT

சென்னை,

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2 ஏவுதளங்கள் மூலம் பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., மற்றும் எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்படுகிறது. இந்த சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய வளாகத்தில் சென்னையை சேர்ந்த விண்வெளி தொழில்முனைவோரால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மற்றொரு தனியார் ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான ஏவுதளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

அதில் இருந்து முதன் முறையாக சென்னையை தளமாக கொண்ட, 'ஐ.ஐ.டி-மெட்ராஸ்- இன்குபேட்டட் ஸ்பேஸ் ஸ்டார்ட்-அப்' தயாரித்த 'அக்னிபான்' ராக்கெட் வருகிற 22-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி அளவில் விண்ணில் ஏவப்பட உள்ளது. செயற்கைகோள் எதுவும் இன்றி சோதனை முயற்சியாக இந்த ராக்கெட் ஏவப்படுகிறது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறிய ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்படும் முதல் ராக்கெட் இதுவாகும்.

ஒரே நிலையை கொண்ட இந்த ராக்கெட் பல்வேறு முதன்மை சிறப்புகளை கொண்டது. இந்த ராக்கெட் உலகின் முதல் '3டி பிரிண்டட்' வகையை சேர்ந்ததாகும். இந்தியாவின் முதல் அரை 'கிரையோஜெனிக்' எந்திரத்தை கொண்டுள்ளது.

18 மீட்டர் உயரமும், 1.3 மீட்டர் விட்டமும் கொண்ட இந்த ராக்கெட் 100 கிலோ எடையுள்ள செயற்கைகோள்களை 700 கிலோ மீட்டர் உயரத்திற்கு எடுத்துச் செல்லும் திறன் கொண்டது. செங்குத்தாக செல்லும் வகையை சேர்ந்த இந்த ராக்கெட் 10 கிலோ மீட்டர் உயரத்தை அடைந்த பிறகு ராக்கெட் அதன் இறங்குதலைத் தொடங்குகிறது. அது தொடங்கிய இடத்தில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வங்காள விரிகுடாவில் விழும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. ராக்கெட்டில் 'திரஸ்ட் வெக்டார் கன்ட்ரோல்ட், ஜிம்பல்டு மோட்டார்' உள்ளது.

அதாவது அதன் முனை வெவ்வேறு கோணங்களுக்கு நகர்த்தப்படலாம். இதனால் உந்துதல் பறக்கும் திசையில் மாறுபடும் மற்றும் மோட்டார் பொருத்தப்பட்டு பல கோணங்களில் சுழலும். இந்த காரணிகள் தரை நிலையத்தில் இருந்து ராக்கெட்டை 'ஸ்டீரிங்' மூலம் வேண்டிய திசைக்கு திருப்ப உதவி செய்ய உதவுகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்