வேலூர் சரகத்தில் விதிகளை மீறிய ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.2.07 லட்சம் அபராதம் விதிப்பு

விதிமீறல்கள் குறித்து, வரும் 18-ந்தேதி வரை சோதனை தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-01-14 11:59 GMT

வேலூர்,

பொங்கல் பண்டிகையையொட்டி வெளியூர்களில் வேலை பார்ப்பவர்கள் பேருந்துகளில் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்கின்றனர். இதனால் பேருந்து நிலையங்களில் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனிடையே ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக சில இடங்களில் புகார்கள் எழுந்தன.

இந்நிலையில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களை உள்ளடக்கிய வேலூர் சரகத்தில், ஆம்னி பேருந்துகளில் விதிகளை மீறி கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பது குறித்து கடந்த 10-ந்தேதி முதல் போக்குவரத்துத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று இரவு 9 மணி முதல் இன்று காலை 5 மணி வரை வேலூர் சரகத்தில் போக்குவரத்துத் துறையினர் நடத்திய சோதனைகளில், விதிகளை மீறிய 19 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.2.07 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் 18-ந்தேதி காலை வரை சோதனை தொடர்ந்து நடைபெறும் என போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்