மொபட் மீது ஆம்னி பஸ் மோதி தொழிலாளி, மைத்துனர் பலி
குளித்தலை அருகே திருவிழாவிற்கு சென்று திரும்பியபோது மொபட் மீது ஆம்னி பஸ் மோதி தொழிலாளி, மைத்துனர் பரிதாபமாக இறந்தனர்.;
குளித்தலை,
ஆம்னி பஸ் மோதல்
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள மணத்தட்டை வள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் கந்தன் (வயது 55). தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் மணிவேல் (29). பேக்கரி கடையில் வேலை பார்த்து வந்தார். இவர் கந்தனின் மைத்துனர் ஆவார். இந்தநிலையில் கந்தன் தனது மொபட்டில் மணிேவலை அழைத்து கொண்டு குளித்தலை அருகே உள்ள வளையப்பட்டியில் நடந்த கோவில் திருவிழாவிற்கு சென்றுள்ளார்.
பின்னர் மீண்டும் வளையப்பட்டியில் இருந்து மொபட்டில் கந்தனும், மணிவேலும் தங்கள் ஊருக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு சென்று கொண்டிருந்தனர். திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் குளித்தலை அருகே மருதூர் சோதனைச் சாவடி அருகே சென்று கொண்டிருந்தபோது, அதே சாலையில் இவர்களுக்கு பின்னால் திருச்சியில் இருந்து குளித்தலை வழியாக பெங்களூரு நோக்கி சென்ற தனியார் ஆம்னி பஸ் எதிர்பாராத விதமாக மொபட் மீது மோதியது.
2 பேர் பலி
இதில் மொபட்டில் இருந்து தூக்கி வீசப்பட்ட மணிவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கந்தன் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் குளித்தலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் குளித்தலை போலீசார் விரைந்து வந்து படுகாயம் அடைந்த கந்தனை மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் மணிவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கந்தனும் பரிதாபமாக இறந்தார்.
போலீசார் விசாரணை
விபத்தில் இறந்த கந்தனுக்கு திருமணமாகி 5 பிள்ளைகள் உள்ளனர். மணிவேலுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் விபத்தில் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்து குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.