லாரி மீது ஆம்னி பஸ் மோதல்; பயணிகள் உள்பட 19 பேர் காயம்

பெரம்பலூர் அருகே லாரி மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் பயணிகள் உள்பட 19 பேர் காயமடைந்தனர்.

Update: 2023-02-01 19:16 GMT

லாரி மீது ஆம்னி பஸ் மோதல்

சென்னை கோயம்பேட்டில் இருந்து நேற்று முன்தினம் இரவு தஞ்சாவூருக்கு பயணிகளுடன் ஒரு ஆம்னி பஸ் புறப்பட்டது. பஸ்சை அரியலூர் மாவட்டம், காமரசவல்லி அருகே மாத்தூரை சேர்ந்த ஜெகத்ரட்சகன் (வயது 31) என்பவர் ஓட்டினார்.

நேற்று அதிகாலை 5 மணியளவில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், வல்லாபுரம் அருகே பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த சாலையில் முன்னால் சர்க்கரை மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த லாரி மீது பஸ் எதிர்பாராதவிதமாக மோதியது.

19 பேர் காயம்

இந்த விபத்தில் பஸ் டிரைவர் ஜெகத்ரட்சகன் மற்றும் 18 பயணிகள் காயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலை ரோந்து போக்குவரத்து போலீசாரும், மங்களமேடு போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த 19 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

இந்த விபத்தினால் பாதிக்கப்பட்டிருந்த போக்குவரத்தை ஒரு வழிப்பாதையாக போலீசார் மாற்றி விட்டு, பின்னர் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தி சரி செய்தனர். இந்த விபத்து தொடர்பாக மங்களமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்