தேர் கவிழ்ந்ததில் காயமடைந்த மூதாட்டி சாவு
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோவில் தேர் கவிழ்ந்ததில் காயமடைந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
மூதாட்டி சாவு
புதுக்கோட்டையில் பிரசித்தி பெற்ற திருக்கோகா்ணம் பிரகதாம்பாள் கோவிலில் ஆடிப்பூரத்தையொட்டி கடந்த மாதம் 31-ந் தேதி தேரோட்டம் நடைபெற்றது. தேர் நிலையில் இருந்து புறப்பட்ட உடனே சில நிமிடங்களில் முன்பக்கமாக கவிழ்ந்தது. இதில் சிக்கிய 8 பேர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் அரிமளத்தை சேர்ந்த வெங்கடேசனின் மனைவி ராஜகுமாரி (வயது 64) என்பவருக்கு மட்டும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் பரிதாபமாக இறந்தார்.
வழக்குப்பதிவு மாற்றம்
மூதாட்டி இறந்தது அவரது குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி பொதுமக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தேர் கவிழ்ந்தது தொடர்பாக திருக்கோகர்ணம் போலீசார் இந்திய தண்டனை சட்டப்பிரிவு 337-ன் கீழ் விபத்தில் காயம் என வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில் ஒருவர் இறந்ததால் அந்த வழக்கு 304 -ஏ விபத்து மரணம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் மற்றவர்கள் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இறந்த மூதாட்டியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான அரிமளத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்கிற்கு பின் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக மூதாட்டியின் உடலுக்கு பிரேத பரிசோதனை கூடம் முன்பு தி.மு.க. நகர செயலாளர் செந்தில், அ.தி.மு.க. நகர செயலாளர் சேட், அ.தி.மு.க. ஓ.பன்னீர்செல்வம் அணியின் மாவட்ட செயலாளர் ராஜசேகரன், பா.ஜ.க. மாவட்ட தலைவர் செல்வம் அழகப்பன் உள்பட அக்கட்சிகளின் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
விசாரணை குழு
தேர் விபத்தில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜ.க. உள்பட பல்வேறு தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று பா.ஜ.க.வினர் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக தகவல் பரவியதால் பாதுகாப்பு பணிக்கு மருத்துவமனை வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
தேர் விபத்து தொடர்பாக விசாரணை நடத்த இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கண்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினரின் விசாரணைக்கு பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.