பழைய வாக்குப்பதிவு எந்திரங்களை திரும்ப ஒப்படைக்க முடிவு
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பழைய வாக்குப்பதிவு எந்திரங்களை திரும்ப அனுப்பி வைக்கப்படும் என ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.;
இந்திய தேர்தல் ஆணையம் 15 ஆண்டுகளை கடந்த, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை, பெங்களூருவில் பெல் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது. நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், 2007-ம் ஆண்டுக்குரிய, 1,260 ஓட்டுப்பதிவு எந்திரங்கள், 580 கட்டுப்பாட்டு எந்திரங்கள் என மொத்தம் 1,840 பழைய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ளன.
இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் ஊரக மற்றும் நகரப்புற உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தப்பட்டவை ஆகும். தற்போது நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் பதிவு எண்களை சரிபார்க்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மேலாளர் செல்வராசு மேற்பார்வையிலான ஊழியர்கள், பெல் நிறுவன பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இப்பணிகள் இன்று (புதன்கிழமை) முடிக்கப்பட்டு, அனைத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், பெங்களூருவில் உள்ள பெல் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.