மணிமுக்தாற்றில் 5 மாடுகளுடன் சிக்கிய முதியவர்
திடீர் வெள்ளப்பெருக்கு: மணிமுக்தாற்றில் 5 மாடுகளுடன் சிக்கிய முதியவர் பொதுமக்கள் உயிருடன் மீட்பு;
வேப்பூர்
வேப்பூர் அருகே உள்ள நல்லூரை சேர்ந்தவர் சுப்பராயன் மகன் தண்டபாணி(வயது 60). இவர் நேற்று தனது 5 மாடுகளை மேய்ச்சலுக்காக நல்லூர் மணிமுக்தா ஆற்றை கடக்க மாடுகளுடன் ஆற்றில் இறங்கினார். பாதி தூரம் சென்றபோது திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றின் இரு கரைகளையொட்டி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் மாடுகளுடன் ஆற்றின் நடுவில் இருந்த மணல் திட்டில் சிக்கி கொண்டு செய்வதறியாமல் தண்டபாணி தவித்தார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் கயிற்றின் உதவியுடன் ஓடி சென்று தண்டபாணியையும், அவரது 5 மாடுகளையும் உயிருடன் மீட்டனர்.
பின்னர் ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு குறித்து விசாரித்தபோது நேற்று அதிகாலை 4 மணியளவில் கள்ளக்குறிச்சி மாவட்டம், மணிமுக்தா அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த மேமாத்தூர் அணைக்கட்டை வந்தடைந்தது. பின்னா் இங்கிருந்து வினாடிக்கு 4,701 கனஅடி தண்ணீர் மணிமுக்தா ஆற்றில் திறந்து விடப்பட்டதால் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதும் தெரிய வந்தது. மணிமுக்தா அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டால், மணிமுக்தா ஆற்றையொட்டியுள்ள கிராம மக்களுக்கு, வேப்பூர் வருவாய்துறை மற்றும் நல்லூர் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் முன்னெச்சரிக்கை செய்வது வழக்கம். ஆனால் நேற்று அணை திறப்பது மற்றும் மணிமுக்தா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது குறித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகவல் தெரிவிக்காததால் கிராம மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்..