பேரையூர்,
பேரையூர் அருகே உள்ள எஸ்.மேலப்பட்டியை சேர்ந்தவர் பூணூல் (வயது 73) இவர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் வட்டார தலைவராக இருந்தார். சம்பவத்தன்று டி.கல்லுப்பட்டி அருகே உள்ள நல்லுதேவன்பட்டியை சேர்ந்த செந்தாமரை என்பவருக்கு பூணூல் தனது வீட்டை வாடகைக்கு விடுவதற்காக வீட்டை காண்பித்துள்ளார். பின்னர் பூணூலும், செந்தாமரையும் இருசக்கர வாகனத்தில் சிலைமலைபட்டி சாலையில் இருந்து பேரையூர் வந்து கொண்டிருந்தனர். இருசக்கர வாகனத்தை செந்தாமரை ஓட்டி வந்தார்.
இருசக்கர வாகனம் அரசு பள்ளி அருகே வரும்போது, முன்னால் சென்ற டேங்கர் லாரியை முந்தி செல்ல முயன்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்தது. இதில் இரு சக்கர வாகனத்தின் பின்னால் உட்கார்ந்து வந்த பூணூல் லாரியின் பின்பக்க டயரில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பேரையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.