திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி முதியவர் பலி

திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் முதியவர் பலியானார்.

Update: 2023-01-02 11:39 GMT

பஸ் மோதி விபத்து

திருவள்ளூர் அடுத்த காக்களூர் சி.டி.எச்.ரோடு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 65). இவர் திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் பகுதியில் புதிய நிலம் வாங்கி வீடு கட்டும் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த 31-ந் தேதியன்று அவர் வீட்டின் கட்டுமான பணியை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். இதையடுத்து பணிகளை முடித்து விட்டு, மீண்டும் அவர் தனது வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில், அவர் திருப்பாச்சூர் சாலையில் வந்தபோது, எதிரே திருத்தணியில் இருந்து திருவள்ளூர் நோக்கி வேகமாக வந்த தனியார் பஸ் ஒன்று எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த கிருஷ்ணனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

பரிதாப பலி

இதைத்தொடர்ந்து காயமடைந்து ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த கிருஷ்ணனை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்து போனார். இதைத்தொடர்ந்து, பலியான கிருஷ்ணன் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடி தலைமறைவான தனியார் பஸ் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்