ஊத்துக்கோட்டை அருகே மூதாட்டி மர்மமான முறையில் சாவு - போலீசார் விசாரணை
ஊத்துக்கோட்டை அருகே மூதாட்டி மர்மமான முறையில் இறந்ததையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
ஊத்துக்கோட்டை அருகே கொல்லபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் எல்லம்மாள் (வயது 75). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்க சென்றுள்ளார். நேற்று காலை வெகுநேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அதே கிராமத்தில் வசிக்கும் அவரது மகள் ஜெயலட்சுமி (51) உள்ளே சென்று பார்த்தபோது எல்லம்மாள் இறந்து கிடந்தது தெரிய வந்தது.
தன் தாய் மாரடைப்பால் இறந்திருக்கலாம் என்று எண்ணிய ஜெயலட்சுமி இறுதி சடங்கு பணிகளை மேற்கொண்டார்.
அப்போது எல்லம்மாள் இடது காதில் அணிந்திருந்த முக்கால் பவுன் கம்மல் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வலது காதில் கம்மல், மூக்குத்தி மற்றும் கழுத்தில் தங்கச் செயின் அப்படியே இருந்தது. இதுகுறித்து ஜெயலட்சுமி பென்னாலூர் பேட்டை போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் ஏழுமலை, சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் விரைந்து சென்று உடலை பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.