மண்எண்ணெய் பாட்டிலுடன் மூதாட்டி தர்ணா

கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு மண்எண்ணெய் பாட்டிலுடன் மூதாட்டி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2022-07-25 17:06 GMT


கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு மண்எண்ணெய் பாட்டிலுடன் மூதாட்டி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

குறைதீர்க்கும் கூட்டம்

கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் கலெக்டர் சமீரன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் மனுக்களை வாங்கினார். இந்த நிலையில் கோவை 67-வது வார்டு ராம்நகர் பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவர் கலெக்டர் அலுவலகம் வந்தார்.

அவர் நுழைவு வாயில் அருகே வந்தபோது திடீரென்று மயக்கம் அடைவதுபோல கீழே விழுந்தார். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அந்த மூதாட்டிக்கு தண்ணீர் குடிக்ககொடுத்தனர்.

தர்ணாவில் ஈடுபட்ட மூதாட்டி

பின்னர் அங்கிருந்து எழுந்த மூதாட்டி திடீரென்று சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதுடன், தான் வைத்திருந்த மண்எண்ணெய் பாட்டிலை எடுத்து தனக்கு முன்பு வைத்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் மண்எண்ணெய் கேனை பறிமுதல் செய்து, மூதாட்டியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் பெயர் கணபதிஅம்மாள் (வயது 80) என்பதும், அவருடைய வீட்டின் முன்பு சாக்கடை கழீவுநீர் தேங்கி நிற்பதால் அதை சுத்தம் செய்யக்கோரி பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால், கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க வந்தது தெரியவந்தது. பின்னர் போலீசார் அறிவுரை கூறி, கலெக்டரிடம் அனு அளிக்க மூதாட்டியை அனுப்பி வைத்தனர்.

மின்கட்டண உயர்வு

த.மா.கா மாவட்ட தலைவர் வி.வி.வாசன் தலைமையில் நிர்வாகிகள் கொடுத்த மனுவில், கொரோனாபாதிப்பு காரணமாக சிறு, குறுந்தொழில்கள் நலிவடைந்து உள்ளது. சில மாதங்களுக்கு முன்புதான் சொத்துவரி உயர்த்தப்பட்டு இருக்கிறது. இந்தநிலையில் தற்போது மின்கட்டணத்தையும் உயர்த்தி உள்ளதால், ஏழை-எளிய மக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே இந்த உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

அப்போது அவருடன் மாவட்ட தலைவர்கள் குணசேகரன், அன்னூர் கார்த்திகேயன் மற்றும் மாநில இளைஞர் அணி தலைவர் யுவராஜ் மற்றும் கார்த்திக் கண்ணன், குறிச்சி ரவி உள்பட பலர் உடன் இருந்தனர்.

கட்சிசார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கொடுத்த மனுவில், மேட்டுப்பாளையம் அருகே செயல்பட்டு வரும் தொழிற்சாலை காரணமாக தண்ணீர் மாசு ஏற்பட்டு உள்ளது. அதுபோன்று அங்கிருந்து அதிகளவில் துர்நாற்றம் வீசுவதால் அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பாதிப்படைந்து வருகிறார்கள். எனவே தொழிற்சாலை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தது. இதுதவிர ஏராளமான மனுக்கள் கொடுக்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்