பொதுமக்கள் வழங்கிய பழைய பொருட்களைஏழை -எளியவர்களுக்கு கொடுக்க சிறப்பு அரங்கு அமைப்பு

பொதுமக்கள் வழங்கிய பழைய பொருட்களை ஏழை -எளியவர்களுக்கு கொடுக்க சிறப்பு அரங்கு அமைக்கப்பட்டு உள்ளது.

Update: 2023-05-24 21:25 GMT

பொதுமக்கள் வழங்கிய பழைய பொருட்களை ஏழை -எளியவர்களுக்கு கொடுக்க சிறப்பு அரங்கு அமைக்கப்பட்டு உள்ளது.

பழைய பொருட்கள்

தூய்மை பாரத திட்டம் சார்பில் பொதுமக்களிடம் இருந்து பழைய பொருட்களை சேகரிக்கும் முகாம் ஈரோடு மாநகராட்சியில் கடந்த 20-ந்தேதி தொடங்கியது. அதன்படி மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களிலும் 12 இடங்களில் முகாம் அமைக்கப்பட்டது.

இதில் வீடுகளில் பயன்படுத்தப்படாமல் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள், பழைய துணிகள், புத்தகங்கள், காலணிகள் உள்ளிட்ட பொருட்களை பொதுமக்கள் கொண்டு வந்து கொடுக்கலாம் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த முகாம் தொடர்பாக ஒலி பெருக்கி மூலமாக ஏற்கனவே பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதனால் பொதுமக்களும் ஆர்வமாக தங்களிடம் இருந்த பழைய பொருட்களை கொண்டு வந்து ஒப்படைத்தனர்.

சிறப்பு அரங்கு

இந்த நிலையில் பொதுமக்களிடம் இருந்து வாங்கப்பட்ட பழைய பொருட்களை ஏழை, எளிய மக்களுக்கு வழங்கும் வகையில், ஈரோடு மாநகராட்சி 2-வது மண்டலத்துக்கு உள்பட்ட தமயந்தி பாபுசேட் திருமண மண்டபத்தில் 'இருப்போர் கொடுக்கலாம் இல்லாதோர் எடுக்கலாம்' என்ற பெயரில் சிறப்பு அரங்கு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த அரங்கில் பொதுமக்கள் வழங்கிய பழைய துணிகள், காலணிகள், புத்தகங்கள் நேற்று வைக்கப்பட்டது. இதை ஏழை, எளிய மக்கள் ஆர்வமுடன் எடுத்து சென்றனர். இதுகுறித்து 2-ம் மண்டல உதவி ஆணையாளர் பிரேம் ஆனந்த் கூறும்போது, 'உங்கள் வீடுகளில் உபயோகமற்று கிடக்கும் பழைய பொருட்கள் மற்றவர்களுக்கு உபயோகம் உள்ளதாக இருக்கும். எனவே பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய பொருட்களை வழங்கினால் அதை ஏழை, எளிய மக்களுக்கு கொடுக்க உதவியாக இருக்கும். இந்த அரங்கு 15 நாட்கள் இருக்கும். பொதுமக்கள் ஆர்வமாக இருந்தால் அரங்கு மேலும் தொடர்ந்து செயல்பட வழிவகை செய்யப்படும்' என்றார். இந்த நிகழ்ச்சியில் துப்புரவு ஆய்வாளர்கள் பூபாலன், கோபாலகிருஷ்ணன் மற்றும் தன்னார்வலர்கள், பரப்புரையாளர்கள் கலந்து கொண்டார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்