அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய வழக்கில்பழைய இரும்புக்கடை உரிமையாளருக்கு ஓராண்டு சிறைதிண்டிவனம் கோர்ட்டில் தீர்ப்பு
அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய வழக்கில் பழைய இரும்புக்கடை உரிமையாளருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து திண்டிவனம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.;
திண்டிவனம்,
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த விழுக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கோதண்டபாணி (வயது 36). சென்னையில் பழைய இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் கடந்த 17.1.2017 அன்று சென்னை தாம்பரத்தில் இருந்து செஞ்சி நோக்கி சென்ற அரசு பஸ்சில் ஏறி தனது சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தார். அந்த பஸ் திண்டிவனம் அடுத்த தீவனூர் அருகே சென்றபோது, கோதண்டபாணி, கண்டக்டரிடம் விழுக்கம் கிராமத்தில் பஸ்சை நிறுத்துமாறு கூறியுள்ளார். அதற்கு கண்டக்டர், தீவனூர் நிறுத்தத்திற்கு பிறகு செஞ்சியில் மட்டுமே நிற்கும் எனக் கூறி கோதண்டபாணியை தீவனூரில் இறக்கி விட்டார். இதனால் ஆத்திரமடைந்த கோதண்டபாணி கீழே கிடந்த கற்களை எடுத்துக் கொண்டு பஸ்சில் ஏறி கண்டக்டரை தாக்கியதுடன், டிரைவர் மீதும் கல்லை வீசியுள்ளார். டிரைவர் விலகி கொண்டதால், அந்த கல் பஸ் முன்பக்க கண்ணாடி மீது விழுந்தது. இதில் பஸ் கண்ணாடி உடைந்து சேதமானது. இதையடுத்து கண்டக்டர் சக பயணிகளுடன் கோதண்டபாணியை மடக்கி பிடித்து ரோஷணை போலீசில் ஒப்படைத்தார். இந்த வழக்கு திண்டிவனம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் -1ல் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று முடிந்து தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ரகுமான், பொது சொத்துக்களை சேதப்படுத்தி அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய கோதண்டபாணிக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ18 ஆயிரத்து 600 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.