போதை ஆசாமிகளால் அலங்கோலமான பஸ்நிலையம்
போதை ஆசாமிகளால் அலங்கோலமான பஸ்நிலையம்
திருப்பூர்,
திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் போதை ஆசாமிகள் பயணிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஆங்காங்கே படுத்து கிடக்கின்றனர். இதனால் பஸ் நிலையம் அலங்கோலமாக காட்சியளிக்கிறது.
எங்கும் போதை ஆசாமிகள்
திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பொலிவுடன் கூடிய மத்திய பஸ் நிலையம் அமைந்துள்ளது. இந்த பஸ் நிலையத்தின் அழகை கெடுக்கும் வகையில் போதை ஆசாமிகள் செயல்பட்டு வருகின்றனர். பஸ் நிலையத்தின் அனைத்து பகுதிகளிலும் போதை ஆசாமிகள் படுத்து கிடக்கின்றனர். இதில் பலர் பயணிகள் நடந்த செல்லக்கூடி பாதையில் படுத்து கிடப்பதால் பயணிகள் நடந்து செல்வதற்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது.
இதேபோல் பயணிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள இருக்கைகளிலும், அதன் அருகிலும் போதை ஆசாமிகள் படுத்து கிடப்பதால் பயணிகள் இருக்கைகளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. ஏதோ ஒரு சில ஆதரவற்றவர்கள், ஏழைகளை தவிர பெரும்பாலும் போதை நபர்கள் தான் பஸ் நிலையத்தில் படுத்து உருண்டு அலங்கோலப்படுத்தி வருகின்றனர்.
பெண்கள் அச்சம்
போதை ஆசாமிகள் சிலர் பெண் பயணிகளுக்கு இடையூறு கொடுத்து வருகின்றனர். இதேபோல் சிலர் போதையில் அரைகுறை ஆடைகளுடன் படுத்து கிடப்பதால் பெண்கள் முகம் சுளிக்கும் நிலை உள்ளது. மேலும் சிலர் அநாகரீக வார்த்தை பேசுவதாலும், எல்லை மீறி நடப்பதாலும் பெண்கள் அச்சம் கொள்கின்றனர்.
நவீன முறையில் இந்த பஸ் நிலையம் கட்டப்பட்டிருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சி தருவதாக உள்ளது. ஆனால் அதை அப்படியே பராமரிக்க வேண்டியது அவசியம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இங்கு பஸ் நிலையத்தில் நிலவும் போதை ஆசாமிகளின் செயல் அருவருக்க செய்வதாக உள்ளது. மறைவான இடங்களில் ஆங்காங்கே காலி மதுபாட்டில்கள் கிடக்கின்றன. சில இடங்களில் பஸ்நிலையத்தின் உள்ளேயே அசுத்தம் செய்து அலங்கோலமாக்கியுள்ளனர். எனவே இதுபோன்ற போதை ஆசாமிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.