ரோப் காரில் பழைய பெட்டிகளை மீண்டும் பொருத்தி ஆய்வு

பழனி முருகன் கோவில் ரோப்கார் நிலையத்தில் பழைய பெட்டிகளை மீண்டும் பொருத்தி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதனால் 2-வது நாளாக இன்றும் ரோப்கார் சேவை நிறுத்தப்படுகிறது.

Update: 2022-10-16 18:45 GMT

ரோப்கார்


பழனி முருகன் கோவிலுக்கு அடிவாரத்தில் இருந்து செல்ல ரோப்கார் சேவை உள்ளது. கிழக்கு கிரிவீதியில் உள்ள நிலையத்தில் இருந்து மலைக்கோவில் சென்று, வருவதற்கு என தலா 4 பெட்டிகள் வீதம் 8 பெட்டிகள் உள்ளன. அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு சுமார் 2 நிமிடத்தில் செல்ல முடிவதால் பெரும்பாலானோர் ரோப்காரையே தேர்வு செய்கின்றனர். ஒரு பெட்டியில் 4 பேர் வீதம் 16 பேர் பயணிக்கலாம். எடையை பொறுத்து செல்லும் நபர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும்.


இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழனி ரோப்கார் நிலையத்துக்கு புதிதாக 10 பெட்டிகள் வாங்கப்பட்டன. கடந்த ஆகஸ்டு மாதம் இரு வழிகளிலும் (அதாவது மேல்நோக்கி செல்ல ஒரு பெட்டியும், கீழ்நோக்கி வருவதற்கு ஒரு பெட்டியும்) தலா ஒரு புதுப்பெட்டியை பொருத்தி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. பின்னர் பக்தர்களின் வசதிக்காக பெட்டிகளில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டன. அதைத்தொடர்ந்து கடந்த மாதம் 8 புதிய பெட்டிகளும் பொருத்தி பக்தர்கள் சேவை தொடங்கியது.


பழைய பெட்டிகள் பொருத்தம்


இந்நிலையில் 14-ந்தேதி அடிவாரம் ரோப்கார் நிலையத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு பக்தர்களை ஏற்றி பெட்டிகள் சென்றபோது, திடீரென ஒரு ரோப்கார் பெட்டி பாறையில் உரசி சேதமானது. அதிக பாரம் ஏற்றியதால் ரோப்கார் பெட்டி உரசியது தெரியவந்தது. அதையடுத்து நேற்று பழனி முருகன் கோவில் ரோப்கார் நிலையத்தில் சேவை நிறுத்தப்பட்டு மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற்றது.


அப்போது ஏற்கனவே கழற்றி வைக்கப்பட்ட பழைய பெட்டிகள் மீண்டும் பொருத்தப்பட்டது. பின்னர் பெட்டியில் அனுமதிக்கப்பட்ட அதிகளவு பாரத்தை ஏற்றி ரோப்கார் இயக்கப்பட்டது. அப்போது இணை ஆணையர் நடராஜன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதற்கிடையில் பழனி ரோப்கார் நிலையத்தில் 2-வது நாளாக இன்றும் (திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதாகவும், ரோப் கார் சேவை இல்லை என்றும் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்