ஒகேனக்கல் தண்ணீரை 6 மாவட்டங்களுக்கு வழங்க வேண்டும்

ஒகேனக்கல் தண்ணீரை 6 மாவட்டங்களுக்கு வழங்க வேண்டும் என்று கிருஷ்ணகிரியில் நடந்த தமிழக விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

Update: 2022-07-05 17:26 GMT

பொதுக்கூட்டம்

தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களில் உயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் கிருஷ்ணகிரியில் நேற்று நடந்தது. கிருஷ்ணகிரி எல்.ஐ.சி. அலுவலகம் அருகே தொடங்கிய ஊர்வலம் 5 ரோடு ரவுண்டானா அருகே நிறைவடைந்தது. தொடர்ந்து பொதுக்கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்திற்கு இந்திய மஞ்சள் விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராமகவுண்டர் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார். துணை செயலாளர் அனுமந்தராஜ், மேற்கு மாவட்ட பொருளாளர் சுப்பிரமணிரெட்டி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். மேற்கு மாவட்ட தலைவர் வண்ணப்பா, துணைத்தலைவர் தோப்பைய கவுண்டர், மாவட்ட ஆலோசகர் நசீர்அமகத், மாவட்ட மகளிரணி தலைவி பெருமா, துணைத்தலைவர் வேலு, துணை செயலாளர் வரதராஜ், மாவட்ட இளைஞர் அணி தலைவர் சத்தியமூர்த்தி, துணை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய மஞ்சள் விவசாயிகள் சங்க தலைவர் தெய்வசிகாமணி, தென்னிந்திய விவசாயிகள் சங்க தலைவர் நரசிம்ம நாயுடு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

இழப்பீடு

கூட்டத்தில், தெலுங்கானா அரசு போல் ஏக்கருக்கு 10 ஆயிரம் ரூபாய் வீதம் ஒவ்வொரு போகத்திற்கும் உற்பத்தி மானியமாக வழங்க வேண்டும். காலேஸ்வரம் நீரேற்று திட்டம்போல் ஒகேனக்கல் தண்ணீரையும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், சேலம், திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களுக்கு வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு மத்திய அரசு தேசிய வங்கி கடன்களையும், தமிழக அரசு கூட்டுறவு கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். வேளாண் சார்ந்த தொழிலுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை விவசாயிகளுக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும்.

வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்திற்கு ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு 15 நாட்களுக்குள் வழங்க வேண்டும். வன விலங்குகளால் ஏற்பட்ட உயிர் சேதத்திற்கு 15 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்