பயன்படுத்தப்பட்ட எண்ணெய் 85 டன் சேகரிக்கப்பட்டு பயோடீசலாக மாற்ற அனுப்பிவைப்பு

உணவு கடைகளில் ஒருமுறை பயன்படுத்தப்பட்ட எண்ணெய் 85 டன் சேகரிக்கப்பட்டு பயோடீசலாக மாற்ற அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை தெரிவித்தார்.

Update: 2023-06-08 16:46 GMT

உணவு கடைகளில் ஒருமுறை பயன்படுத்தப்பட்ட எண்ணெய் 85 டன் சேகரிக்கப்பட்டு பயோடீசலாக மாற்ற அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை தெரிவித்தார்.

அதிகாரிகள் ஆய்வு

திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவுறுத்தலின்பேரில் திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு குழுவினர் திருப்பூர் மாவட்டத்தில் உணவு கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில்,உணவு கடைகளில் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை சேகரித்து அதை பயோடீசலாக மாற்றம் செய்ய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒருமுறை பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை உணவு வணிகர்களிடம் இருந்து விலைக்கு பெற்று பயோ டீசலாக மாற்றப்படுகிறது. இதனால் சமையல் எண்ணெயை மீண்டும், மீண்டும் பயன்படுத்துவது தடுக்கப்படும்.

இதுபோன்று மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதால் இதயம், வயிறு சம்பந்தமான கோளாறுகள் ஏற்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதை தடுக்கும் வகையில் ஒருமுறை பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை சேகரிக்கும் ரூகோ திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்கள்.

111 டன் எண்ணெய் சேகரிப்பு

இதுகுறித்து திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை கூறியதாவது:-

மாவட்டத்தில் இதுவரை 312 உணவு வணிகர்கள் இந்த திட்டத்துக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். உணவு தயாரிப்பு கூடங்களில் 40 லிட்டர் கொள்ளளவு உள்ள கேன்கள் பயன்படுத்தப்பட்ட எண்ணெயை சேகரிக்க வைக்கப்படும். ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை சேகரித்து வாரத்துக்கு ஒருமுறை அல்லது இருமுறை சேகரிக்கப்பட்டு பயோடீசலாக மாற்ற அனுப்பிவைக்கப்படுகிறது.

மாதத்துக்கு 7 முதல் 8 டன் வரை ஒருமுறை பயன்படுத்தப்பட்ட எண்ணெய் சேகரிக்கப்பட்டு பயோடீசலாக மாற்ற அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கடந்த மே மாதம் வரை 111 டன் எண்ணெய் சேகரிக்கப்பட்டு அதில் 85 டன் பயோடீசலாக மாற்றுவதற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் திருமண மண்டபங்களில் செயல்படுத்த முனைப்பு காட்டப்படுகிறது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

புகார் தெரிவிக்கலாம்

பேக்கரி, டீக்கடைகள், உணவு விற்பனை நிலையங்களில் பஜ்ஜி, போண்டா போன்ற பலகாரத்தை காகிதத்தில் பரிமாறுவது தவிர்க்கப்பட்டு வாழை இலையை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களில் 90 கிலோ காகிதம் பறிமுதல் செய்து கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கலப்படம் மற்றும் உணவு தரம் தொடர்பான புகார்களை 94440 42322 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்