"தகுதி உள்ளவர்களுக்கு நலத்திட்டங்களை வழங்க அதிகாரிகள் மறுக்கின்றனர்"-மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கருத்து
“தகுதியானவர்களுக்கு அரசின் நலத்திட்டங்களை வழங்க அதிகாரிகள் மறுக்கின்றனர்” என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதி தெரிவித்தார்.;
"தகுதியானவர்களுக்கு அரசின் நலத்திட்டங்களை வழங்க அதிகாரிகள் மறுக்கின்றனர்" என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதி தெரிவித்தார்.
திருமண உதவித்திட்டம்
திருச்சி மாவட்டம் பூவலூர் தாலுகாவைச் சேர்ந்த காசிநாதன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
நான் விவசாய கூலி வேலை செய்து வருகிறேன். கடந்த 2017-ம் ஆண்டில் என்னுடைய மகளுக்கு திருமணம் நடந்தது. தமிழக அரசின் சமூக நலத்துறையின் மூவலூர் ராமாமிர்தம் நினைவு திருமண உதவித்திட்டத்தின்கீழ் எனது மகளுக்கு 8 கிராம் தங்கம், ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கக்கோரி விண்ணப்பித்தேன். ஆனால் இதுவரை அந்த திட்டத்தின்கீழ் உரிய உதவிகளை வழங்கவில்லை. எனவே என் மகளின் திருமணத்தையொட்டி, சமூக நலத்துறை சார்பில் 8 கிராம் தங்கம் மற்றும் ரூ.50 ஆயிரம் நிதி வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
அதிகாரிகள் மறுக்கின்றனர்
இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
தகுதி உள்ளவர்களுக்கு அரசு வழங்கும் பல்வேறு நலத்திட்டங்கள் அதிகாரிகளால் மறுக்கப்படுகின்றன. அதற்கு இந்த வழக்கு சிறந்த உதாரணம். மனுதாரர் விவசாய கூலித்தொழிலாளி. அவரது ஆண்டு வருமானம் ரூ.48 ஆயிரம். அவருடைய மகளின் திருமணத்தையொட்டி அரசின் நலத்திட்டத்தின்கீழ் 8 கிராம் தங்கம் மற்றும் ரூ.50 ஆயிரம் நிதி கேட்டு விண்ணப்பித்தும் அதிகாரிகள் அதை வழங்கவில்லை.
வருமானச்சான்றிதழை மனுதாரர் தாக்கல் செய்யாததால், அவரது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்பதை ஏற்க இயலாது. வருமானச்சான்றிதழை சமர்ப்பிக்குமாறு கூறி, அவரது மனுவை பரிசீலித்து இருக்க வேண்டும்.
4 வாரத்தில் வழங்க வேண்டும்
எனவே மனுதாரரின் கோரிக்கையை இந்த கோர்ட்டு ஏற்கிறது. அவருக்கு உரிய திட்டத்தின்கீழ் 8 கிராம் தங்கம் மற்றும் நிதி உதவித்தொகையை 4 வாரத்தில் அதிகாரிகள் வழங்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.