ஆற்றூர்-மார்த்தாண்டம் சாலையில் தொடர் விபத்து நடைபெறும் இடங்களில் அதிகாரிகள் ஆய்வு
ஆற்றூர்-மார்த்தாண்டம் சாலையில் தொடர் விபத்தை தடுப்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.;
திருவட்டார்,
ஆற்றூர்-மார்த்தாண்டம் சாலையில் தொடர் விபத்தை தடுப்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தொடர் விபத்து
குமரி மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்கும் நடவடிக்கையில் காவல் துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதிவேகமாக வாகனங்கள் செல்வதாலும், சாலையின் அமைப்பு காரணமாகவும் விபத்துகள் அடிக்கடி ஏற்படுகின்றன. இது தவிர குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்வதற்காக தோண்டப்பட்ட குழிகள் சரியாக மூடப்படாததால் தொடர் விபத்து நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
தக்கலை டிவிஷனுக்குட்பட்ட பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சாலை விபத்துகளில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் ஆற்றூர் அருகே மங்களாநடை முதல் கல்லுப்பாலம் வரை ஒரு மாதத்தில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட விபத்துகள் நடைபெற்றுள்ளது. அந்த விபத்துகளில் சிக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
அதிகாரிகள் ஆய்வு
இதையடுத்து ஆற்றூர் முதல் மார்த்தாண்டம் வரையிலான நெடுஞ்சாலையில் அதிகமாக விபத்துகள் ஏற்படும் பகுதிகள் என கண்டறியப்பட்ட இடங்களை நேற்று மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ராஜேஷ் தலைமையில் போக்குவரத்து துறையினரும், தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு கணேஷ் தலைமையில் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
விபத்துகள் ஏற்படாமல் இருப்பதற்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பது குறித்து அங்கு ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து அப்பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய விபத்து தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆய்வு கூட்டத்தில் சமர்ப்பித்து அதன் பின் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.