பக்தர்களுக்கு செய்ய வேண்டிய வசதிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்துக்கு வரும் பக்தர்களுக்கு செய்ய வேண்டிய வசதிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Update: 2022-06-21 17:11 GMT

திருவட்டார்:

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்துக்கு வரும் பக்தர்களுக்கு செய்ய வேண்டிய வசதிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

கும்பாபிஷேகம்

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 418 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் அடுத்த மாதம் (ஜூலை) 6-ந்தேதி நடைபெறுகிறது.

இதையொட்டி கோவில் மூலவர் சிலை புதுப்பிக்கும் பணி முடிவடைந்து விட்டது. கோவில் கருவறையில் தற்போது 22 அடி நீளமுள்ள கடுசர்க்கரையோக திருமேனியை கூடுதல் பளபளப்புடன் பக்தர்கள் தரிசிக்க முடியும். மேலும் சிலையின் பின்புறமுள்ள சுவரில் சங்கை உரைத்து அதன்மூலமாகக்கிடைக்கப்பெற்ற வெள்ளை வர்ணம் பூசியுள்ளதால் சிலையின் அழகு கூடுதல் அழகுடன் காட்சி தருகிறது.

திருவட்டார் பஸ் நிலையம், காங்கரை, சந்தை, பாலம் ஆகிய பகுதிகளில் சாமிகளின் உருவங்கள் அடங்கிய மின் விளக்கு போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

அதிகாரிகள் ஆய்வு

கும்பாபிஷேக விழாவை சிறப்பாக நடத்துவது குறித்தும், பக்தர்களுக்கு செய்ய வேண்டிய வசதிகள் குறித்தும் கோவிலில் நேற்று தேவசம் போர்டு இணை ஆணையாளர் ஞான சேகர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் சூப்பிரண்டு ஆனந்த், என்ஜினீயர் ராஜ்குமார், தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன், திருவட்டார் இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல் காதர் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கும்பாபிஷேக விழாவையொட்டி பக்தர்கள் வழக்கமாக வரும் கிழக்குவாசல் வழியாக அனுமதிக்காமல் மேற்குவாசல் வழியாக கோவிலுக்குள் அனுமதிப்பது என்றும், கும்பாபிஷேகம் நடைபெறும் நேரத்தில் கோவில் வளாகத்துக்குள் 25 ஆயிரம் பக்தர்கள் வருவார்கள் என்றும், அந்நேரம் 2000 பக்தர்கள் கோவில் வளாகத்தில் நிற்பதற்கு வசதி செய்வது குறித்தும் அவர்கள் ஆய்வு நடத்தினர்.

ஒரு லட்சம் பக்தர்கள்

மேலும் அன்றைய தினம் ஒரு லட்சம் பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்வார்கள் என்றும் அதிகாரிகள் எதிர்பார்க்கிறார்கள்.

அதற்கு ஏற்றவாறு வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்தும் அவர்கள் கோவில் வரை படத்தை வைத்து எந்தெந்த பகுதியில் என்னென்ன பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்