முத்திரையிடப்படாத தராசுகளை வியாபாரத்துக்கு பயன்படுத்தினால் நடவடிக்கை- திருவாரூர் தொழிலாளர் உதவி ஆணையர்

முத்திரையிடப்படாத தராசுகளை வியாபாரத்துக்கு பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என திருவாரூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) வசந்தகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2022-12-29 19:00 GMT

முத்திரையிடப்படாத தராசுகளை வியாபாரத்துக்கு பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என திருவாரூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) வசந்தகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மீன், இறைச்சி கடைகளில் ஆய்வு

சென்னை தொழிலாளர் ஆணையர் அதுல்ஆனந்த் உத்தரவின்படியும், திருச்சி கூடுதல் தொழிலாளர் ஆணையர் ஜெயபாலன், தொழிலாளர் இணைஆணையர் கோவிந்தன் ஆகியோரின் அறிவுரையின்படியும் திருவாரூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) வசந்தகுமார் தலைமையிலான ஆய்வுக்குழுவினர் திருவாரூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களில் உள்ள மீன், இறைச்சி கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் 31 மீன் மற்றும் இறைச்சி கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது 8 முரண்பாடுகள் கண்டறியப்பட்டன. குறைந்தபட்ச கூலிச்சட்டத்தின் கீழ் 32 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டதில் 2 முரண்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்டது.

பறிமுதல்

மீன் மற்றும் இறைச்சி விற்பனை செய்யும் கடைகளில் மறுபரிசீலனை செய்து பரிசீலனை சான்று பெறாமல் வியாபாரத்துக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு தராசுகள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

வியாபாரத்துக்கு பயன்படுத்தப்படும் தராசுகளை காலமுறைப்படி முத்திரையிட்டு பயன்படுத்த வேண்டும். அவ்வாறு முத்திரையிடப்படாத தராசுகளை பயன்படுத்துவது கண்டு பிடிக்கப்பட்டால், சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்து சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்