வாழை தோப்பில் ஆக்கிரமித்து கொட்டகை அமைப்பு
பேரணாம்பட்டு அருகே வாைழத்தோப்பில் ஆக்கிரமித்து கொட்டகை அமைக்கப்பட்டது. அதை வருவாய்த்துறையினர் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றினர்.;
கொட்டகை அமைப்பு
பேரணாம்பட்டு தாலுகா மாச்சம்பட்டு கிராமத்தில் வருவாய்துறைக்கு சொந்தமான 30 சென்ட் இடத்தில் அந்தப்பகுதியை சேர்ந்த ஒருவர் வாழை பயிரிட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று மதியம் மாச்சம்பட்டு ஊராட்சி வார்டு உறுப்பினர் சரளாவின் கணவர் விஸ்வநாதன் மற்றும் ஆசைத்தம்பி, ராஜா தசரதன், மதன், சுரேஷ், வேலு ஆகிய 7 பேர் தங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்காததால், வீட்டு மனை பட்டா வழங்கக் கோரி திடீரென வாழை தோப்பிற்குள் சென்று கொட்டகை அமைத்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த பேரணாம்பட்டு தாசில்தார் நெடுமாறன், வருவாய்த் துறையினர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதனையடுத்து பேரணாம்பட்டு வருவாய் ஆய்வாளர் கீதா, கிராம உதவியாளர் சுந்தரேசன் ஆகியோர் சென்று விசாரணை நடத்தி, கொட்டகை அமைக்கக் கூடாது என தடுத்தபோது அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பட்டா வழங்க நடவடிக்கை
அப்போது வருவாய் ஆய்வாளர் கீதா உங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க ஆதி திராவிடர் நலத்துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தகுதியான பயனாளிகளை கண்டறிந்து பட்டா வழங்க நடவடிக்கைப் படும் என்று தெரிவித்தார்.
பின்னர் உமராபாத் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத் மற்றும் போலீசார் அங்கு வந்தனர். அதன்பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் 7 குடிசைகள் அமைக்க கட்டப்பட்ட கம்புகளை வருவாய்த் துறையினர் அகற்றினர்.