விளாத்திகுளம் அருகே ஆக்கிரமிப்பிலிருந்தமீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்குசொந்தமான ரூ.2 கோடி நிலம் மீட்பு
விளாத்திகுளம் அருகே ஆக்கிரமிப்பிலிருந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.2 கோடி நிலம் மீட்கப்பட்டது.
எட்டயபுரம்:
தனியார் ஆக்கிரமிப்பிலிருந்த விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.2 கோடி மதிப்பிலான நிலத்தை வருவாய்த்துறை மற்றும் அறநிலையத்திறை அதிகாரிகள் நேற்று மீட்டு அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.
ஆக்கிரமிப்பு
விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான புன்செய் நிலங்களில் ஏராளமான தனிநபர்கள் முறைகேடாக பட்டா பெற்று நிலங்களை ஆக்கிரமித்துள்ளாகவும், அந்த நிலங்களை மீட்டு கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று கணேசன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை உத்தரவின் பேரில், விளாத்திகுளம் அருகே உள்ள அயன்பொம்மையாபுரம் கிராமத்தில் தனி நபர்கள் பெயரில் பட்டா பெறப்பட்டுள்ள 46 ஏக்கர் நிலங்களின் பட்டாக்களில் இருந்து தனிநபர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு, மீண்டும் கோவில் பெயரில் பட்டா மாற்றம் செய்து மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு பிறப்பித்தார்.
ரூ.2 கோடி நிலம் மீட்பு
அதனை தொடர்ந்து முதற்கட்டமாக அயன்பொம்மையாபுரம் கிராமத்தில் சுமார் 22 ஏக்கர் நிலங்களில் உள்ள தனிநபர்களின் ஆக்கிரமிப்பை அகற்ற கோரி இந்து சமய அறநிலையத்துறை தூத்துக்குடி இணை ஆணையர் நடவடிக்கை எடுத்தார். அதன்படி நேற்று தூத்துக்குடி உதவி ஆணையர் சங்கர் தலைமையில், செயல் அலுவலர் வெள்ளைச்சாமி, கோவில் ஆய்வாளர் சிவகலைப்பிரியா, வருவாய்துறை அதிகாரிகள் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் அயன்பொம்மையாபுரம் கிராமத்தில் 22 ஏக்கர் 18 சென்ட் நிலத்தில் இருந்த தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்றி விட்டு கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். இதற்கான அறிவிப்பு பலகை மீட்கப்பட்ட நிலத்தில் வைக்கப்பட்டது. இந்த நிலத்தின் மதிப்பு ரூ.2 கோடியாகும். தொடர்ந்து மீதமுள்ள நிலங்களையும் மீட்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.