தமிழகம் முழுவதும் தனி நபர்கள் ஆக்கிரமித்த அரசு நிலங்கள் மீட்கப்படும்
சென்னையில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலம் மீட்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் தனி நபர்கள் ஆக்கிரமித்த அரசு நிலங்கள் மீட்கப்படும் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.;
சென்னையில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலம் மீட்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் தனி நபர்கள் ஆக்கிரமித்த அரசு நிலங்கள் மீட்கப்படும் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.
ஆக்கிரமிப்பு
விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
சென்னை கதீட்ரல் சாலை பகுதியில் கடந்த 1910-ம் ஆண்டு அப்போதைய மாநில அரசால் தோட்டக்கலை சங்கம் என்ற அமைப்பிற்கு 23 ஏக்கர் நிலம் பொது பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளது. காலப்போக்கில் இந்த நிலம் தனியார் ஆக்கிரமிப்புக்குள்ளானது. கடந்த 1989-ம் ஆண்டு முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி இந்த நிலத்தை மீட்க நடவடிக்கை மேற்கொண்டார். அவர் எடுத்த நடவடிக்கையின் பலனாக கடந்த 2009-ம் ஆண்டு 17 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு அதில் செம்மொழி பூங்கா அமைக்கப்பட்டது.
அ.தி.மு.க. பிரமுகர்
இதனைத்தொடர்ந்து மீதமுள்ள ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஆதலால் இது கிடப்பில் போடப்பட்டது. இந்த 6 ஏக்கர் நிலம் அ.தி.மு.க. பிரமுகர் தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி வசம் இருந்த நிலையில் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் இந்த நிலத்தை மீட்க நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. அரசு நிலம் கையகப்படுத்த வேண்டிய அவசியத்தை உணராமல் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் நிலத்தை தொடர்ந்து அ.தி.மு.க. பிரமுகர் வசமே வைத்திருக்க அனுமதி அளித்துள்ளனர்.
நிலம் மீட்பு
முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்பு தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ள அரசு நிலத்தை மீட்க நடவடிக்கை மேற்கொண்டார். அந்த வகையில் கதீட்ரல் சாலையில் செம்மொழி பூங்காவிற்கு எதிரே உள்ள இந்த 6 ஏக்கர் நிலத்தையும் மீட்க சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்த நிலையில் உச்ச நீதிமன்றம் 6 ஏக்கர் அரசு நிலத்தை மீட்க அனுமதி அளித்து உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உடனடியாக இந்த நிலத்தை மீட்குமாறு வருவாய் துறைக்கு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து வருவாய் துறை நில நிர்வாக ஆணையர் நாகராஜன், கதீட்ரல் சாலையில் தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி வசம் இருந்த 6 ஏக்கர் நிலத்தை மீட்க நடவடிக்கை மேற்கொண்ட நிலையில் நேற்று முன்தினம் இந்த நிலம் கையகப்படுத்தப்பட்டு அதற்கு சீல் வைக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும்
இதேபோன்று தமிழகம் முழுவதும் தனி நபர் ஆக்கிரமிப்புகளில் உள்ள அரசு நிலங்களை மீட்டு மக்களின் தேவைக்காக பயன்படுத்த முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதன் பேரில் வருவாய் துறை இதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளது. தமிழக முழுவதும் எந்த பகுதியிலாவது அரசு நிலம் தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்தால் அதுபற்றி வருவாய் துறைக்கு தகவல் தெரிவித்தால் அதனை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.