மகப்பேறு டாக்டர்கள் நியமிக்க வேண்டும்

சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் மகப்பேறு டாக்டர்கள் நியமிக்க வேண்டும் என சமாதான கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Update: 2023-04-29 18:45 GMT

 சீர்காழி:

சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் மகப்பேறு டாக்டர்கள் நியமிக்க வேண்டும் என சமாதான கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

அரசு ஆஸ்பத்திரி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு தாலுகா முழுவதிலும் உள்ள பொதுமக்கள், கர்ப்பிணிகள் என ஆயிரக்கணக்கானோர் தினந்தோறும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.கிராமப்புறங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் பல இருந்தாலும் 24 மணி நேரமும் அவசர தேவைக்கு வரும் பொதுமக்களுக்கு இந்த அரசு தலைமை ஆஸ்பத்திரி உயிர் காக்கும் மையமாக திகழ்கிறது.

இந்த ஆஸ்பத்திரியில் முக்கிய பங்கு வகிக்கக்கூடிய கர்ப்பிணி பெண்களுக்கான மகப்பேறு பிரிவில் இரண்டு டாக்டர்கள் பணியில் இருந்து வந்தனர். ஆனால் ஏப்ரல் முதல் வாரத்தில் இருவரும் பிரசவகால விடுப்பில் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

முற்றுகை போராட்டம்

இதனால் மகப்பேறு பிரிவு பெண் டாக்டர்கள் இல்லாமல் செயல்பட்டு வருகிறது. மிகவும் அத்தியாவசிய தேவையாக கருதப்படும் மகப்பேறு டாக்டர்கள் பணியிடம் கடந்த 20 நாட்களுக்கு மேலாக நிரப்பப்படாமல் காலியாக உள்ளது. ஏழை கர்ப்பிணிகள் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று பல ஆயிரங்களை செலவு செய்ய முடியாத சூழ்நிலையில் சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இதனை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில வர்த்தக அணி துணை செயலாளர் விஜயரங்கன் தலைமயில் அரசு ஆஸ்பத்திரி முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர்.

சமாதான கூட்டம்

அதனை தொடர்ந்து சீர்காழி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் சமாதான கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு அரசு ஆஸ்பத்திரியின் தலைமை டாக்டர் அருண் ராஜ்குமார் தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணை செயலாளர் விஜயரெங்கன், மாவட்ட செய்தி தொடர்பாளர் தேவா, டாக்டர் மருதவாணன், அறிவழகன், பூபேஷ் தர்மேந்திரா ஆகியோர் முன்னிலையில் சமாதான கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் உடனடியாக அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்து பெண் டாக்டர்களை நியமனம் செய்வது. காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசை கேட்டுக் கொள்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மேலும் நடவடிக்கை இல்லை என்றால் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட போவதாகவும் தெரிவித்தனர். இந்த கூட்டத்தில் டாக்டர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்