தூத்துக்குடி வ.உ.சி.துறைமுகத்தில்கண்காணிப்பு வார நிறைவு விழா
தூத்துக்குடி வ.உ.சி.துறைமுகத்தில்கண்காணிப்பு வார நிறைவு விழா;
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஆணையத்தில் 2022-ம் ஆண்டுக்கான கண்காணிப்பு வார நிறைவு நாள் விழா துறைமுக வளாகத்தில் நடந்தது. விழாவுக்கு வ.உ.சி. துறைமுக ஆணைய தலைமை கண்காணிப்பு அதிகாரி எஸ்.முரளிகிருஷ்ணன் தலைமை தாங்கி வரவேற்று பேசினார். துணைத்தலைவர் பிமல்குமார் ஜா முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஆணைய தலைவர் தா.கி.ராமச்சந்திரன் கலந்து கொண்டு, கண்காணிப்பு வாரவிழாவை முன்னிட்டு பள்ளி, மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்ட பேச்சு, ஓவிய, கட்டுரை, பாட்டு போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினார்.
அப்போது, நம் நாடு வளர்ச்சி அடைந்த நாடாக வளர்ந்து வருகிறது. இந்த நேரத்தில், உண்மை, ஒழுக்கம், நேர்மை பற்றிய முக்கியதுவம் இளைஞர்கள் மனதில் இருப்பது மிகவும் அவசியமான ஒன்று. துறைமுக அதிகாரிகளிடம், அதிகாரபூர்வ நடைமுறைகளை செயல்படுத்தும் போது, நிறுவனத்தின் செயல்பாடுகள் சீராக இருக்க மனிதநேய அணுகுமுறையை கையாள வேண்டும் என்று கூறினார்.
விழாவில் வ.உ.சி. துறைமுக ஆணைய அதிகாரிகள், ஊழியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். கண்காணிப்பு அதிகாரி ஆர்.பாலாஜி ரத்தினம் நன்றி கூறினார்.