குறவன் குறத்தி ஆட்டம் என்ற பெயரில் நடத்தப்படும் ஆபாச நடனங்களை தடை செய்ய வேண்டும்

குறவன் குறத்தி ஆட்டம் என்ற பெயரில் நடத்தப்படும் ஆபாச நடனங்களை தடைசெய்ய வேண்டும் என்று மாநிலமாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.;

Update: 2022-07-30 17:06 GMT

குறவன் குறத்தி ஆட்டம் என்ற பெயரில் நடத்தப்படும் ஆபாச நடனங்களை தடைசெய்ய வேண்டும் என்று மாநிலமாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநில மாநாடு

தமிழ்நாடு குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் 3-வது மாநில மாநாடு அரக்கோணம் டவுன் ஹாலில் நடைபெற்றது. மாநில துணைச் செயலாளர் வி.கே.தணிகாசலம் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் ஜி.பெருமாள், வரவேற்புரையாற்றினார். சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில செயலாளர் ஏ.வி.சண்முகம், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. பி.டில்லிபாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் குறிஞ்சி நிலத் தோன்றல்களான குறவன் இனத்தை பங்குப்பட்டியலில் சேர்த்திட மத்திய அரசு கேட்டுள்ள கூடுதல் விவரங்களை உடனடியாக பழங்குடியினர் ஆராய்ச்சி மையத்திடம் கேட்டுப் பெற்று மத்திய அரசக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஒரே குறவன் இனத்தை, வாழ்கின்ற இடத்தை வைத்தும், செய்கின்ற தொழில்களை வைத்தும் 26 வகையாக பிரித்து டி.என்.சி பட்டியலில் வைத்திருப்பதை நீக்கம் செய்திட வேண்டும். குறவன் இன மக்களுக்கு சாதிச்சான்று, குடிமனைப்பட்டா, தொகுப்பு வீடுகள் கல்விக்கடன், தாட்கோ மூலம் தொழில் தொடங்க கடன் மற்றும் அரசின் நலத்திட்டங்களை தடையின்றி வழங்கிட வேண்டும்.

தடை செய்ய வேண்டும்

குறவன் இன மக்களுக்கென தனி நலவாரியம் தமிழக அரசு உடனடியாக அமைத்திட வேண்டும். குறவன் இனத்தை இழிவுபடுத்தும் குறவன் குறத்தி ஆட்டம் என்ற பெயரில் நடத்தப்படும் ஆபாச நடனங்களை உடனடியாக தடை செய்ய வேண்டும். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு தாலுக்கா, தட்டறணை கிராமம் குறவன் இனத்தைச் சேர்ந்த தங்கமணியை லாக்கப் படுகொலை செய்த கலால் காவல்துறையினர் மீது சி.பி.சி.ஐ.டி. விசாரணையை துரிதப்படுத்தி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், ரூ.20 லட்சம் நிவாரணமும் வழங்கிட வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழ்நாடு குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளர் வி.வினோத் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்