கீழ்நிலை பணியாளர்களுக்கு நீதி கிடைப்பதே நோக்கம்:"ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை வரவழைக்க வேண்டும் என்பது நோக்கமல்ல"- வனத்துறை செயலாளர் ஆஜரான வழக்கில் மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கருத்து

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை வரவழைக்க வேண்டும் என்பது தங்கள் நோக்கமல்ல என்றும், கீழ்நிலை பணியாளர்களுக்கு நீதி கிடைப்பதே நோக்கம் என வனத்துறை செயலாளர் ஆஜரான வழக்கில் மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கருத்து தெரிவித்தார்.;

Update: 2023-09-12 20:15 GMT


ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை வரவழைக்க வேண்டும் என்பது தங்கள் நோக்கமல்ல என்றும், கீழ்நிலை பணியாளர்களுக்கு நீதி கிடைப்பதே நோக்கம் என வனத்துறை செயலாளர் ஆஜரான வழக்கில் மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கருத்து தெரிவித்தார்.

கோர்ட்டு அவமதிப்பு வழக்கு

திருச்சியை சேர்ந்த கருப்பையா என்பவர் வனத்துறையில் காவலராக பணியாற்றினார். அவர் தனக்கு பதவி உயர்வு வழங்கக்கோரி கடந்த 2014-ம் ஆண்டு மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, மனுதாரரின் மனுவை பரிசீலித்து, அவருக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

ஆனால் அந்த உத்தரவு முறையாக நிறைவேற்றப்படவில்லை. இதற்கு காரணமான அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருப்பையா சார்பில் கடந்த 2017-ம் ஆண்டில் மதுரை ஐகோர்ட்டில் அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த முறை இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, மனுதாரரின் புகார் குறித்து வனத்துறை செயலாளர் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியும், வனத்துறை செயலாளருமான சுப்ரியா சாகு நேரில் ஆஜரானார்.

நோக்கமல்ல

பின்னர் நீதிபதி, "கல்வித்துறைக்கு அடுத்தபடியாக வனத்துறை சார்ந்த அவமதிப்பு வழக்குகள் அதிக அளவில் தாக்கல் செய்யப்படுகின்றன. கோர்ட்டு அவமதிப்பு வழக்குகளில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை வரவழைக்க வேண்டும் என்பது நோக்கமல்ல. கீழ்நிலை பணியாளர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே நோக்கம்" என்றார்.

மேலும் "கோர்ட்டு பிறப்பிக்கும் உத்தரவுகளை நிறைவேற்றுவதற்கு ஏன் தாமதமாகிறது? கோர்ட்டு பிறப்பிக்கும் உத்தரவுகளை அதிகாரிகள் முறையாக நிறைவேற்றினாலே அவமதிப்பு வழக்குகளின் எண்ணிக்கை குறைந்துவிடும்" என கருத்து தெரிவித்தார்.

அதற்கு அரசு வக்கீல் ஆஜராகி, மனுதாரர் தொடர்பான கோர்ட்டு உத்தரவு முறையாக நிறைவேற்றப்பட்டுவிட்டது என தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்