கொள்ளிடம் ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு

திருமானூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2023-09-06 18:59 GMT

கொள்ளிடம் ஆறு

அரியலூர் மாவட்டம் திருமானூரை அடுத்த தூத்தூர் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் புதிதாக ராட்சத ஆழ்துளை கிணறு அமைத்து நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு குடிநீர் கொண்டு செல்வதற்கான பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தூத்தூர், குருவாடி பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் கதவணையுடன் கூடிய தடுப்பணை கட்டும் திட்டம் செயல்படுத்த இருந்தது.

இந்த திட்டத்தை தமிழக அரசு ரத்து செய்துவிட்டு ராட்சத ஆழ்துளை கிணறு அமைக்க முயற்சிப்பதால் எங்களது கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் முற்றிலும் பாதிக்கப்படும் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு

கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் ஆழ்துளை கிணறு அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் 2 விவசாயிகள் தீக்குளிக்க முயற்சி செய்தனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 63 பேரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.இந்தநிலையில் தூத்தூர், குருவாடி, தேளூர், கோமான், காமரசவள்ளி, அழகிய மணவாளன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நேற்று ஒன்றிணைந்து கொள்ளிடம் ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வலியுறுத்தியும் 500-க்கும் மேற்பட்டோர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விவசாயம் காப்போம், தடுப்பணை வேண்டும், நீரின்றி அமையாது நிலவளம், விவசாயிகள் வயிற்றில் அடிக்காதே என்பது உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மணல் குவாரி

இதுகுறித்து கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் கூறியதாவது:- தூத்தூர், குருவாடி பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் கதவணையுடன் கூடிய தடுப்பணை கட்டும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். மேலும் இங்கு செயல்படும் மணல் குவாரிகளை அகற்றி விட்டு பாதுகாக்கப்பட்ட குடிநீர் மண்டலமாக அறிவிக்க வேண்டும். கொள்ளிடம் ஆற்றில் கதவணையுடன் கூடிய தடுப்பணையை கட்டிவிட்டு ஆழ்துளை கிணறு அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த போராட்டத்தில் பெண்கள், குழந்தைகள், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள், அ.தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் அப்பகுதியில் அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் தூத்தூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்